அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தலைவர் ஷம்மி சில்வா புதன்கிழமை (29) தனது பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அவருடன் சேர்ந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்குழுவும் பதவி விலகுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து ஷம்மி சில்வா இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாத்தியமான வெளியேறும் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார் என உள்வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த சந்திப்பு சுமூகமாக இருந்ததாகவும் அறியப்படுகிறது. எவ்வாறெனினும் ஷம்மி சில்வா பதவி விலகும் பட்சத்தில், புதிய தேர்தல்கள் நடத்தப்படும் வரை, அதிகாரிகள் ஒரு இடைக்காலக் குழுவை நியமிக்கலாம் அல்லது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை ஒரு தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின் கீழ் ஒப்படைக்கலாம்.
இதற்கிடையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரன் விக்ரமரத்ன ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
