காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

Date:

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களில், ஹமாஸ் அமைப்பின் காசா பிராந்திய இராணுவப் பிரிவின் தலைமைத் தளபதியான அல்-தின் அல்-ஹத்தாத் (Ezaddin Al-Haddad) குறிவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், இந்தத் தாக்குதலுக்கான உத்தரவை தாங்களே பிறப்பித்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், அவர் கொல்லப்பட்டாரா என்பது குறித்து ஹமாஸ் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் காசாவிலுள்ள சில மசூதிகளில் அவர் ‘அல்-ஷஹீத்’ (தியாகி) ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

யார் இந்த இஸாதீன் அல்-ஹத்தாத்? (அபு சாஹிப்)

1970-இல் காசாவின் அல்-துஃப்பா (Al-Tuffah) பகுதியில் பிறந்த இஸாதீன் அல்-ஹத்தாத், “அபு சாஹிப்” என்றும், இஸ்ரேலிய ஊடகங்களால் மறைந்திருந்து செயல்படும் அவரது திறமையால் “அல்-கஸ்ஸாமின் பேய்”  என்றும் அழைக்கப்படுகிறார்.

1987-இல் ஹமாஸ் இயக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதில் இணைந்த இவர், இஸ்ரேலின் உளவாளிகளைக் கண்டறிந்து அழிக்கும் ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவான ‘மஜ்த்’ (Majd)-இல் பணியாற்றினார்.

ஒரு சாதாரண வீரராகத் தொடங்கி, பின் படைப்பிரிவுத் தளபதி, பட்டாலியன் தளபதி எனப் படிப்படியாக உயர்ந்தார். 2021-இல் தளபதி பாசிம் ஈஸா கொல்லப்பட்ட பிறகு காசா பிரிகேடின் தளபதியாகப் பொறுப்பேற்றார். முகமது சின்வாருக்குப் பிறகு ஒட்டுமொத்த காசா பிரிவின் முக்கிய இராணுவக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

இஸ்ரேல் இவரைக் கொல்ல 2009, 2012 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் தீவிர முயற்சி செய்தது. தற்போதைய போரிலும் பலமுறை குறிவைக்கப்பட்டார்.

இத்தாக்குதல்களில் இவரது மகன்களும் கொல்லப்பட்டனர். இவரைப் பற்றிக் தகவல் தருபவர்களுக்கு 7,50,000 டாலர் சன்மானம் வழங்கப்படும் என இஸ்ரேல் அறிவித்திருந்தது.

2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ‘அல்-அக்ஸா புயல்’ தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக அல்-ஹத்தாத் கருதப்படுகிறார். தாக்குதலுக்கு முன்னதாக, ஹமாஸ் வீரர்களிடம் அவர் இரகசியமாக வழங்கிய உத்தரவில்: “நிச்சயமான வெற்றியின் மீது நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் மீது பாரத்தைப் போட்டு வீரியத்துடன் போரிடுங்கள். ‘அல்லாஹு அக்பர்’ என்ற முழக்கம் நமது பெருமையாக இருக்கட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தாக்குதலின் போது அவர் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்:

  1. தாக்குதலின் முதல் சில மணிநேரங்களிலேயே அதிகப்படியான இஸ்ரேலிய வீரர்களை உயிரோடு சிறைபிடிக்க வேண்டும்.

  2. இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் மற்றும் குடியிருப்புகளைக் கைப்பற்றும் காட்சிகளை உலகறிய ‘லைவ் பிராட்காஸ்ட்’ (நேரலை) செய்ய வேண்டும்.

ஹமாஸ் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த அல்-ஹத்தாத்தைக் குறிவைத்து, மே 15, 2026 அன்று மேற்கு காசாவின் ரிமால் பகுதியில் அவர் மறைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அங்கிருந்து தப்ப முயன்ற வாகனம் ஆகியவற்றின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் 13 வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

 மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த சிறை அதிகாரிகளை சந்தித்த அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும்...

காஸாவில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால ஹமாஸ் ஆட்சி கலைப்பு: நிர்வாகப் பொறுப்பை ஏற்கிறது நிபுணர்கள் குழு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை கடந்த 20 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த தன்னாட்சி...