இந்தியாவின் தமிழ்நாட்டின் 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு 234 தொகுதிகளிலும் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 23ம் திகதி தமிழக சட்டசபை தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெற்றது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகி சில மணித்தியாலங்களில் முன்னிலை பெறுபேறுகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என்றும், ஊடகங்கள் வாயிலாக நேரலைத் தகவல்கள் மற்றும் ஆய்வுகள் வழங்கப்படும் என்றும் தமிழக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே கட்டமாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வாக்குப்பதிவுகளில் ஒன்றாக 84.8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), தனது ஆட்சி நிர்வாகம் மற்றும் நலத்திட்டங்களை முன்வைத்து மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
அதேநேரம், தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), மீண்டும் ஆட்சப்பீடத்தில் அமர இலக்கு வைத்துள்ளது.
தமிழ்த் திரையுலகிலிருந்து அரசியலில் கால் பதித்துள்ள தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகம் (தவெக), குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஒரு முக்கிய புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
சில கணிப்புகள் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்று கூறுகின்றன. மற்ற சில கணிப்புகள் தனது முதல் தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றி கழகம் எதிர்பாராத அளவிற்கு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டுகின்றன.
கருத்துக்கணிப்புகள் வௌ;வேறு விதமாக இருந்தாலும், தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் காரணியாக இருக்கும் என்பதில் அரசியல் ஆய்வாளர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு மாத்திரமன்றி உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இந்த தேர்தல் முடிவுகளை அறிவதற்கு தீவிர எதிர்பார்ப்பு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
