நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.
நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இது குறித்து தெரிவிக்கையில், அவிசாவளையில் 180 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக ஏனைய பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி விபரங்கள் பின்வருமாறு, ஹன்வெல்ல: 158 மி.மீ, தெரணியகல: 122 மி.மீ
இந்தக் கனமழை காரணமாக நேற்று (14) இரவு முதல் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்ட போதிலும், அது இதுவரை அனர்த்த எச்சரிக்கை மட்டத்தை எட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அத்தனகலு ஓயாவின் தூனமலே நீர்மானி நிலையப் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் 176 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
