தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று அண்மையில் புத்தளம் நகரில் நடைபெற்றது.
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் முதன்மை வளவாளராக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம். எம். முகம்மது கலந்து கொண்டார்.
நாட்டின் தேர்தல் முறைமைகள் குறித்து பல முக்கிய தகவல்களை அவர் இதன்போது மக்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, தற்போது மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாடாளுமன்றத்தின் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும்.
ஒருவேளை மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த அரசு தயாராகுமானால், பழைய தேர்தல் முறையின் கீழ் எந்தவிதப் பிரச்சினையுமின்றி அதனை நடத்த முடியும்.
ஆசிய நாடுகளிலேயே முதன்முதலில் சர்வஜன வாக்குரிமை பெற்ற நாடு இலங்கை என்பது நமது வரலாற்றுச் சாதனை. வாக்குரிமை என்பது நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். 2017ஆம் ஆண்டில் கொண்டுவரப்படவிருந்த புதிய அரசியலமைப்பு திருத்த முயற்சியே தற்போதைய மாகாண சபை தேர்தல் இழுபறிக்கு முக்கியக் காரணமாகும்.
தேர்தலை மேலும் ஒத்திவைப்பது மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் வாக்குரிமையையும் மீறும் செயலாகும் எனவும் சுட்டிக்காட்டிய அவர், இதனால் நாட்டின் அனைத்து மாகாண சபைகளும் தற்போது செயலற்றுக் கிடப்பதாக கவலை வெளியிட்டார். மாகாண சபைகள் இயங்காத நிலையிலும் அதன்கீழ் உள்ள திணைக்களங்களும் அரச கட்டமைப்புளும் வழமை போல இயங்கும்போது, தேர்தலை மட்டும் நடத்தாமல் இருப்பது மிக மோசமான ஒரு பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய பெஃப்ரல் அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுஜீவ கயநாத், மாகாண சபை தேர்தல்கள் ஒன்றரை பதவிக் காலங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு மாகாண சபையினதும் காலக்கெடு மற்றும் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ள காலப்பகுதிகள் குறித்தும் அவர் விபரித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் எதிர்க்கட்சி பலவீனமாக இருப்பதனாலேயே அரசாங்கத்திற்கு தேர்தலை இவ்வாறு ஒத்திவைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மாகாண சபை முறைமை இந்தியாவினால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்தியா இத்தேர்தல் குறித்து மிகுந்த அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால், அதிக அழுத்தம் கொடுத்தால் இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்துவிடும் எனக் கருதி, தற்போது இந்தியா மாகாண சபை தேர்தல் குறித்து பெரியளவில் அக்கறை காட்டுவதில்லை. மேலும், அண்மைக் காலத்தில் ஏற்பட்ட கொவிட் போன்ற தேசிய பேரிடர்களும் தேர்தல் ஒத்திவைப்புக்கு மற்றுமொரு காரணியாகும்.”
இது ஒரு அரசியலமைப்பு ரீதியான சிக்கலாக மாற்றப்பட்டுள்ளதால், இதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கோ அல்லது சிவில் அமைப்புகள் தலையிடுவதற்கோ முடியாத சூழல் காணப்படுவதாகவும், அதனாலேயே தாம் மக்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் புத்தளம் மாவட்ட சர்வமதக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி அருட்தந்தை யொஹான் ஜெயராஜ் மற்றும் அப்துல் முஜீப் மௌலவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், பெஃப்ரல் அமைப்பின் உதவி தேசிய அமைப்பாளர் சத்யராஜ், புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.சி.எம். ருமைஸ், பெஃப்ரல் அமைப்பின் புத்தளம் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், , கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதி நிதிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


