தகவல்: ஏ.எஸ்.எம்.ஜாவித்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் (Colombo Grand Mosque) நம்பிக்கையாளர்கள் சபை விசேட இலவச கல்வித் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
“இலவசக் கல்வியின் ஊடாக அடுத்த தலைமுறையை ஆதரிப்போம்” எனும் பொருளுள்ள தொனிப்பொருளில், மாணவர்களின் எதிர்காலக் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் 6, 7, 8 மற்றும் 9 ஆம் ஆண்டுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக வார இறுதி விடுமுறை நாட்களிலும், வார நாட்களில் மாலை நேரங்களிலும் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திறமையும் அனுபவமும் மிக்க ஆசிரியர்களைக் கொண்டு கடந்த சனிக்கிழமை (20) முதல் இவ்வகுப்புகள் முறையாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இதில் விசேட அம்சமாக, இனம் மற்றும் மத வேறுபாடின்றி அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இதுவரை 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த இலவச வகுப்புகளில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். இவ்வகுப்புகளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய முக்கிய பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்த இலவச கல்வித் திட்டம் தொடர்பான விளக்கமளிக்கும் ஆரம்ப நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (19) கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் தலைமையில் பள்ளிவாசலின் ஹமீதியா மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
நிர்வாக சபை உறுப்பினர் நவாஸ்டீன் வரவேற்புரை நிகழ்த்த, பாடநெறிகள் குறித்த அறிமுக உரைகளை ஆசிரியர்களான அனஸ் அசுபர் மற்றும் பிர்ஸாட் அனஸ் ஆகியோர் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, வகுப்புகளை நடத்தவுள்ள ஆசிரியர்களான அனஸ் அசுபர், திருமதி தயாளினி, இஹ்லாஸ் குஸைன், திருமதி சுமையா பாயிஸ், திருமதி பாத்திமா முஸ்னியா மற்றும் பிர்ஸாட் அனஸ் ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். நிகழ்வின் நிறைவாக, பாடநெறிப் பொறுப்பாளர் சாதிக் ஜவ்பர் நன்றியுரை ஆற்றினார்.
பொருளாதாரச் சுமையால் பிள்ளைகளின் மேலதிகக் கல்விக்கான செலவுகளைக் கவனிக்க முடியாமல் தவிக்கும் பெற்றோருக்கு, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இந்த மனிதாபிமான முயற்சி பெரும் உதவியாக அமைந்துள்ளது எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

