நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் ஏதுவாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, மேல் மாகாணமே மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் பெரும்பான்மையான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பத்தரமுல்ல, மகரகம, பிலியந்தலை, ஹோமாகம, கடுவெலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை, எகொடஉயன, கொத்தடுவ போன்ற பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதானம் மிக்கவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல, சீதுவை, களனி, ராகம, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, பியகம, வத்தளை, கட்டான மற்றும் மஹர உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இந்த அவதானப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில், பண்டாரகம, ஹொரண, இங்கிரிய, மத்துகம, பாணந்துறை, வாதுவை, களுத்துறை மற்றும் பாயாகல ஆகிய பகுதிகளில் உள்ள பிரிவுகள் இதன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
அத்துடன், காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், பதுளை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இந்த அதிஅவதானப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
