‘முஸ்லிம் ஊடகங்கள்’ குறித்த பிரதி அமைச்சர் முனீர் முழப்பரின் கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது: முஸ்லிம் மீடியா போரம் அறிக்கை

Date:

முஸ்லிம் ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வோர் இனவாத சக்திகளுக்குத் துணை போவதாக சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது பலத்த அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், பிரதியமைச்சருக்கு (18.06.2026) திகதியிட்டு அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதத்திலேயே இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11.06.2026 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர் முனீர் முளப்பர், “முஸ்லிம் சமூக விவகாரங்களை அறிக்கையிடும் முஸ்லிம் ஊடகங்கள், தமது செய்தி அறிக்கையிடல்கள் மூலம் இனவாத சக்திகளுக்குத் துணைபோகும் வகையில் நடந்து கொள்கின்றன” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு  முஸ்லிம் மீடியா போரம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி இயங்கும் ஏதேனும் ஊடகங்களோ அல்லது ஊடகவியலாளர்களோ அவ்வாறான பக்கச்சார்பான பின்னணிகளைக் கொண்டிருந்தால், அவற்றை ஆதாரபூர்வமாக, உரிய தரப்பினரின் பெயரைக் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டுவதே முறையானதாகும்.

அதை விடுத்து, ஊடக நெறிமுறைகளைப் பேணி, நடுநிலையாக அறிக்கையிட்டு வரும் ஒட்டுமொத்த ஊடகங்களையும் உள்ளடக்கும் வகையில் பொதுப்படையாக முன்வைக்கப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

“அண்மைக்காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து முஸ்லிம் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சமூகப் பொறுப்புணர்வுடன் மக்களை விழிப்பூட்டும் வகையில் செய்திகளை வெளியிட்டிருந்தனர்.

இது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களின் இன்றியமையாத கடமையாகும். இவ்வாறானதொரு பின்னணியில், எவ்வித சான்றுகளுமின்றி பொதுப்படையாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் மனவேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.”

இவ்விடயம் குறித்து கடந்த 15.06.2026 அன்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இக்கடிதம் பிரதியமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான பாரதூரமான மற்றும் பொதுப்படையான குற்றச்சாட்டுக்களை பாராளுமன்றம் உள்ளிட்ட உயரிய சபைகளில் முன்வைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு போரம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், சபையில் முன்வைத்த மேற்படி கருத்தை பிரதியமைச்சர் திருத்திக் கொள்ள வேண்டும் எனவும், ஊடகங்களின் சுயாதீன செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து, ஊடகவியலாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்வதாகவும் அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...