இலங்கையில் புனித குர்ஆன் பிரதிகள் மற்றும் அதன் மொழிபெயர்ப்புகள் தொடர்பாக தேவையற்ற சில சர்ச்சைகளும், தவறான புரிதல்களும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன. புனித குர்ஆனை ஒரு சர்ச்சையான நூலாகக் காட்டும் வீணான முயற்சிகள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், சவூதி அரேபிய அரசு உலகிற்கு ஒரு உன்னதமான செய்தியைத் தந்துள்ளது.
புனித ஹஜ் கடமைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு தங்களது நாடுகளுக்குத் திரும்பும் சர்வதேச யாத்திரீகர்களுக்கு, சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜீஸ் அல் சவுத்தின் வருடாந்திர சிறப்புப் பரிசாக புனித குர்ஆன் பிரதிகள் வழங்கும் பணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
ஜெத்தாவில் உள்ள கிங் அப்துல்அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் இந்தத் திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சவூதி அரேபியா முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்கள், கடல் துறைமுகங்கள் மற்றும் நிலப்பரப்பு எல்லைக் கடக்கும் சோதனைச் சாவடிகளிலும் யாத்திரீகர்களுக்கு குர்ஆன் பிரதிகள் தொடர்ந்து விநியோகிக்கப்படவுள்ளன.
மதீனாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ‘King Fahd Complex for the Printing of the Holy Qur’an மூலம் அச்சிடப்பட்ட மொத்தம் 19 இலட்சம் (1.9 Million) குர்ஆன் பிரதிகள் இதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ளன.
