2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
பெறுபேறுகளை doenets.lk இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதற்கமைய யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வரலாற்றில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சை முடிவுகளில் இதுவரை இல்லாத வகையிலான மாபெரும் வரலாற்றுச் சாதனையொன்று இம்முறை நிலைநாட்டப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றத்திற்குப் பிறகு, கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக பரீட்சைக்குத் தோற்றிய அனைத்துப் பாடங்களிலும் “A” சித்திகளைப் பெற்று, 9 A என்ற அரிய சாதனையை மாணவன் முஹம்மத் ஜவ்ஸி முஹம்மத் ஷிபாக் (MUHAMMAD JAWZY MUHAMMAD SHIFAAQ) நிகழ்த்தியுள்ளார்.
இச்சாதனையானது ஒரு தனிப்பட்ட மாணவனின் வெற்றியாக மட்டும் சுருங்கிவிடாமல், ஒஸ்மானியா கல்லூரியின் கல்விப் பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லாகவும், ஒட்டுமொத்த கல்லூரிக்கும் யாழ். மண்ணுக்கும் பெருமை சேர்த்த வரலாற்றுப் பதிவாகவும் அமைந்துள்ளது.
சவால்களுக்கு மத்தியிலும் இத்தகையதொரு சாதனையைப் படைத்த மாணவன் முஹம்மத் ஷிபாக், அவர்தம் பெற்றோர்கள் மற்றும் இதற்கு வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் சமூக ஆர்வலர்களும் பழைய மாணவர்களும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

