இலங்கையின் முதலாவது முஸ்லிம் ஆண்கள் பாடசாலையாக 1884 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி, தனது வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அமையவுள்ள நவீன வசதிகளைக் கொண்ட 9 மாடிக் கட்டடத் தொகுதிக்கு 28ஆம் திகதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கொழும்பு மத்திய பகுதியில் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் நடைபெற்ற இந்த விழாவில், பிரபல கொடையாளி எலியாஸ் அப்துல் கரீம், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி ஸாலிஹ் ஆகியோருடன் முக்கிய வர்த்தகர்கள், பழைய மாணவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இவர்களின் கூட்டு முயற்சியே இந்த உன்னத திட்டத்தை நனவாக்க வழிவகுத்துள்ளது.
பாடசாலையின் பெருமைமிகு பழைய மாணவர்களையும் முன்னணி வர்த்தகர்களையும் கொண்ட ‘லைட் ஃபார் லைஃப்’ (Light for Life Pvt Ltd) கூட்டமைப்பினால் ரூபாய் 2.5 பில்லியன் செலவில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன வளாகம், கொழும்பு மத்திய பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி மற்றும் புறப்பாடக் கலை நடவடிக்கைகளை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதற்கான உயர் தொழில்நுட்ப வகுப்பறைகள் மற்றும் நவீன வசதிகளைக் கொண்டிருக்கும்.
முன்னதாக, பழைய மாணவர்கள் மற்றும் கொடையாளர்களின் தாராள பங்களிப்பின் மூலம் சுமார் 120 பேர்ச் காணி கொள்வனவு செய்யப்பட்டு, இந்த மாபெரும் திட்டத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இக்கட்டடத் தொகுதி முழுமையாக நிறைவடையும் போது, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும், பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்தையும் ஒளிரச்செய்யும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 6,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் எழுச்சியுடன் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் நிறைவில் வருகை தந்த அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது. பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்துடன் (OBA) இணைந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த உணவளிப்புப் பணியை மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்திருந்தனர்.
ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியின் நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியத்தை பறைசாற்றுவதுடன் மட்டுமன்றி, சமூக ஒற்றுமை மற்றும் கொடைப்பண்பின் மூலம் கல்வித்துறையில் எத்தகைய மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்த வரலாற்று நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

