போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகள் ஏற்படுத்திய மோதல் காரணமாக, நீர்கொழும்பு சிறைச்சாலையின் கட்டடங்கள் மற்றும் சொத்துக்களுக்கு 10 கோடி ரூபாவுக்கும் (100 மில்லியன்) அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையை முழுமையாக மீட்டெடுக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தற்காலிகமாகப் பெருமளவிலான கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
போகம்பரை மற்றும் காலி மஹமோதர சிறைச்சாலைகள் மீண்டும் தற்காலிக சிறைகளாக மாற்றப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். காலி மஹமோதர வைத்தியசாலை மற்றும் கேகாலை பரகம்மன தொழிற்துறை களஞ்சியம் ஆகியவற்றை தற்காலிக சிறைகளாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2025 இல் கட்டி முடிக்கப்பட்ட நான்கு மாடிக்கட்டடங்களில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை மெகசின் / கொழும்பு ரிமாண்ட்: கைதிகளின் உழைப்பைக் கொண்டு 2025 இல் ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக கட்டடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
446.9 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் 2 கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதுடன், 2026 இல் 100 மில்லியன் ரூபா நிதியில் புதிய திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது 2027 இல் நிறைவடையும். இதன் இரண்டாம் கட்டம் அடுத்த வருடம் ஆரம்பமாகும்.
கைவிடப்பட்ட இரு கட்டடங்களை அகற்றிவிட்டு, புதிய கட்டடங்களை அமைக்க இந்த ஆண்டு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்லேகலை சிறைக்கட்டடப் பணிகள் 2028 இல் நிறைவடையும். மாத்தறை சிறைச்சாலையை கொட்டவிலவத்தை பகுதிக்கு மாற்றும் திட்டம் 2027 இல் ஆரம்பமாகும்.
கொழும்பு சிறைச்சாலை வளாகத்தை ஹொரண மில்லாவ பகுதிக்கு மாற்றுவதற்கான திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
“சிறைக்கைதிகளும் மனிதர்களே” என்ற கொள்கையின் கீழ் அரசாங்கம் சிறைச்சாலை நெரிசலைக் குறைக்கப் பல நடைமுறைச் சாத்தியமான திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த திட்டங்களை முடக்கும் நோக்கில் திட்டமிட்டு இத்தகைய மோதல்கள் உருவாக்கப்படுகிறதா என்ற பலத்த சந்தேகம் சமூகத்தில் எழுந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
