புத்தளம் நகரைச் சேர்ந்த பிரபல அறிவிப்பாளரான சலீம் கான் எனப்படும், ஏ.ஆர்.எம். நாசிம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண அளவிலான பாடல் இசைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வடமேல் மாகாண சமூக சேவைப் பிரிவினால், பிரதேச செயலகங்களுக்கு இடையே நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான (குறிப்பாக விழிப்புலன் அற்றவர்களுக்கான) பாடல் இசைப் போட்டியிலேயே சலீம் கான் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
பிறவியிலேயே இரு கண்களிலும் பார்வையை இழந்தவரான சலீம் கான், தற்போது புத்தளம் மாநகர சபையின் சமுர்த்திப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கான பாடசாலையில் கடமையாற்றி வருகிறார்.
பல்வேறு பிரபலங்களின் பேச்சுத் திறமைகளையும், அவர்களின் குரல் வடிவத்தையும் (Mimicry) அப்படியே அச்சுப்பிசகாமல் ஒப்பித்துக் காட்டும் அசாத்திய திறமை படைத்தவர் சலீம் கான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாகாண அளவிலான வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து நடைபெறவுள்ள அகில இலங்கை ரீதியிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாடல் இசைப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.
சலீம் கானின் இந்த சாதனை குறித்து அவருடைய அறிவிப்புத்துறை குருவான புத்தளத்தைச் சேர்ந்த கலாநிதி எம்.யு.எம். சனம் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
“சலீம் கான் பாடசாலை மாணவனாக இருந்தபோது, ரத்மலானை விமான நிலையப் பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். அங்குள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது கதீப் (உரையாற்றுபவர்) வராத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
அந்த இக்கட்டான நேரத்தில், மாணவனான சலீம் கானுக்கு தைரியம் கொடுத்து, அவரை மிம்பரில் ஏற்றி ஜும்மா குத்பா உரையை நிகழ்த்த வைத்தேன். அன்று முதல் இன்று வரை அவரிடம் இருக்கும் திறமையை நான் அறிவேன்.
‘உன்னால் முடியும் சலீம் கான்’, அகில இலங்கை ரீதியிலான போட்டியிலும் வெற்றி பெற்று வா !” என்று வாழ்த்தியுள்ளார்.
அறிவிப்புத்துறையிலும், இசைத்துறையிலும் சாதித்து வரும் சலீம் கான் அவர்களுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
