அமெரிக்க – ஈரான் சமாதான ஒப்பந்தம் : யுத்த வெறியர்களான அமெரிக்கா – இஸ்ரேல் இடையே பிளவு

Date:

லத்தீப் பாரூக்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம், ஈரானுக்கு 300 பில்லியன் டொலர்களை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொள்வது என்பன, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒன்றாக இருந்தது.

அதேபோல் அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் நிலைத்திருக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ள நிலையில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிளவு என்பதையும் நம்பமுடியாது. எனினும் இது நடந்துள்ளது.

2026 ஜூன்19 அன்று இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அமெரிக்கா, 2026 பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை தொடங்கியது.

இந்த மோதல்களை முடிவு காணும் நோக்கில் 60 நாட்களுக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் மத்தியஸ்தர்களாகப் பணியாற்றிய பாகிஸ்தான் மற்றும் கத்தார் என்பன ஒரு கூட்டு அறிக்கையின் மூலம் இதனை தெரிவித்துள்ளன.

இந்த சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த பிரபல அமெரிக்க அரசியல் விஞ்ஞானியும் சர்வதேச உறவுகள் அறிஞருமான பேராசிரியர் ஜான் மியர்ஷைமர் என்பவர் இவ்வாறு கூறி உள்ளார். “இந்தப் போரில் வெற்றி பெற்றுள்ள ஈரான், அதன் ஒவ்வொரு கோரிக்கையையும் ஒப்புக் கொள்ளும்படி அமெரிக்காவை வற்புறுத்தி   உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதற்கான காரணம் எளிதானது. போர் தொடர்ந்தால், அடுத்த ஓரிரு மாதங்களில் சர்வதேசப் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைச் சந்திக்க நேரிடும். ஹோர்முஸ் ஜலசந்தி​ மீதான ஈரானின் கட்டுப்பாடு உலகப் பொருளாதாரத்தின் கழுத்தை நெரித்தது.

நாங்கள் ஒரு “பொருளாதார பேரழிவை” பார்க்கின்றோம் என்றும், 1930 களின் பெரும் மந்தநிலையுடன் எப்போதும் அடையாளம் காட்டப்பட்டு பேசப்படும் ஹெர்பர்ட் ஹூவரின், இரண்டாவது வருகையாக தான் நினைவு கூறப்படுவதை ஒருபோதும் விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி டிரம்ப் வெளிப்படையாக கூறி உள்ளார்.

ஈரானுக்கு மிகவும் சாதகமான நிபந்தனைகளின் அடிப்படையில் ட்ரம்ப் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தமை குறித்து, இஸ்ரேலிய தலைவர்களும் இஸ்ரேலிய ஆதரவு பிரசார சக்திகளும் கோபம் அடைந்துள்ளதாகவும் பேராசிரியர் மியர்ஷைமர் மேலும் கூறினார்.

இருப்பினும் இந்த நிலைமையில் இருந்து மீளுவதற்கான மாற்று மூலோபாயங்கள் எதுவும் அவர்களிடம் நிச்சயமாக இல்லை, மேலும் இந்த நெருக்கடியான நிலைமை அப்படியே தொடர்ந்து நீடித்தால்,   அல்லது குறிப்பாக மீண்டும் குண்டு வீச்சுக்களை  ஆரம்பித்தால்    சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்படும் கடுமையான சேதத்தை மதிப்பிட அவர்கள் மறந்து விட்டதாகத் தெரிகின்றது.

இந்நிலையில் தான், ஆச்சரியப்படத்தக்க வகையில், ட்ரம்பும் துணை ஜனாதிபதி வான்ஸும் இஸ்ரேலியர்களுக்கும், அமெரிக்காவில் உள்ள அவர்களின் ஆதரவு அணியினருக்கும் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அந்த முடிவின் வழியில் அவர்களால் குறுக்கே நிற்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

பேரழிவை ஏற்படுத்தும் இந்தப் போரைத் தொடங்க டிரம்பை இணங்கச் செய்வதில் பெரும் பங்காற்றிய இஸ்ரேல், இப்போது அதற்கான ஒரு தீர்வையும் தடுக்கவே விரும்புகின்றது என்பதற்கான, தெளிவான ஆதாரங்களை மீண்டும் ஒருமுறை நாம் காண முடிகின்றது. இது அமெரிக்காவின் கழுத்தில் ஒரு தொண்டாக மாறி உள்ளது என்று பேராசிரியர் மியர்ஷைமர் மேலும் கூறி உள்ளார்.

‘நாங்கள் இழந்துவிட்டோம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், “டிரம்ப்பின் ஈரான் ஒப்பந்தம் வாஷிங்டனின் ஒரு மூலோபாய தோல்வியாகக் கருதப்படுகின்றது” என்று சீன் மேத்யூஸ் என்ற கட்டுரையாளர் தெரிவித்துள்ளார்.

முதலாவது உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் வெட்கக்கேடான விதிமுறைகளின் கீழ் ஜெர்மனின் ஏகாதிபத்தியவாதம் வெர்சாயில் என்ற இடத்தில்  பிரபலமான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதற்கான காரணம், அன்றைய நிலையில் யுத்தம் அதன் எல்லைகளைத் தாண்டி பெரிய அளவில் நடைபெற்ற போதிலும், சரணடைவதையே அது சார்ந்திருந்தது. ஆனால் இன்றைய யுத்தத்தின் போது ஈரான் ஒருபோதும் அமெரிக்க கரைகளைக் கூட நெருங்கவே இல்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு ஏற்படவில்லை.

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு இடைமறிப்பு பொறிமுறைகளின் இருப்பை ஆபத்தான முறையில் சவாலுக்கு ஆளாக்கியது.

அதே நேரத்தில் ஹோர்முஸ் ஜலசந்தி மீதான அதன் முற்றுகை வாஷிங்டனின் மூலோபாய எண்ணெய் கையிருப்பை நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வைத்தது. இதன் விளைவாக  நிலத்தடி படிவ எரிபொருள்களுக்காக முழு உலகப் பொருளாதார வல்லரசுகளும் கையேந்தும் நிலைமை உருவானது.

இதனால் வேறு வழியின்றி ஜெர்மனியும் அதன் எதிரிகளும் முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த, அதே பிரெஞ்சு அரண்மனையில் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

அப்போது பேசிய அவர்  உலகம் ஒரு “பொருளாதார பேரழிவை” எதிர்கொண்டுள்ளது என்று கூறினார். என்று சீன் மேத்யூஸ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“போரை எதிர்ப்பவர்கள் போர் முடிவடைவதில் மகிழ்ச்சியடையலாம், மேலும் இந்த பைத்தியக்காரத்தனமான ஒப்பந்தம் முழு போரும்… ஒரு மொத்த பேரழிவு என்பதற்கான இறுதி ஆதாரம் என்பதை சுட்டிக் காட்டலாம்” என்று அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கிறிஸ் மர்பி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியோ அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் இஸ்ரேலை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துகின்றது. மேலும் நெதன்யாகுவை அம்பலப்படுத்துகின்றது என்று கட்டுரையாளர் மெரோன் ராபோர்ட் டெல் அவிவ்வில் வைத்து தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 28 அன்று நெதன்யாகு ஈரானுக்கு எதிராக போரைத் தொடங்கிய போது, இஸ்ரேலின் நோக்கங்கள் தெளிவாகத் தெரிந்தன. ஈரானின் அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை அகற்றுவது, மற்றும் ஈரானிய அரசாங்கத்தை வீழ்த்துவது என்பனவே அதன் இலக்குகளாக இருந்தன.

மாதங்கள் பல கழிந்தும், அந்த இலக்குகள் எதுவுமே எட்டப்படவில்லை. மாறாக, ஈரான் பெப்ரவரியில் இருந்ததை விட வலுவான நிலையில் இருப்பதாகவே தோன்றுகின்றது. அந்த நாடு தனது அணுசக்தி மற்றும் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் திட்டங்களை இன்னும் தன்வசம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டமை உட்பட இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் பல இருந்த போதிலும் ஈரானின் புதிய அதிஉயர் தலைமை வலுவடைந்துள்ளதாகவேத் தெரிகின்றது.

இன்றைய நிலையில் அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலை விட தெஹ்ரானுடன் மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளன. அதனால் ஈரானும் பிரம்மாண்டமான முறையில் ஒரு பிராந்திய சக்தியாக வளர்ந்து வருவதாகத் தெரிகின்றது.

இதற்கிடையில், இஸ்ரேல் இதற்கு முன் பல தசாப்தங்களாக அனுபவிக்காத ஒரு மோசமான நிலையில் தன்னைக் காண்கின்றது. பல இஸ்ரேலியர்கள் முன்னெப்போதையும் விட தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக உணர்கின்றார்கள்.

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் உலகெங்கிலும் உள்ள இஸ்ரேல் ஆதரவு சக்திகளை புறக்கணிக்க வழிவகுத்ததால், கடந்த இரண்டரை ஆண்டுகளில், ஏற்கனவே அவர்களிடம் காணப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு, மேலும் அதிகரித்துள்ளது.

இப்போது இந்த நிலைமையில் மேலும் ஒரு மாற்றம் தெரிகின்றது. இன்றைய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனக்கு மிகவும் நெருக்கமான அமெரிக்காவிடமிருந்து கூட தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவே  தெரிகின்றது.

இந்த ஒப்பந்தம் காரணமாக ஜனாதிபதி  டிரம்புக்கும் பிரதமர் நெதன்யாகுவுக்கும் இடையே வளர்ந்து வரும் பிளவுகள் மற்றும் கருத்து மோதல்களை அன்றாடம் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இஸ்ரேலியர்களைப் பொருத்தமட்டில், வாஷிங்டனுடனான தமது நாட்டின் உறவில் ஏற்படும் எந்தவொரு முறிவும், தமது சுய இருப்புக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகின்றது. இஸ்ரேலின் பாதுகாப்பு கோட்பாடு என்பது எப்போதுமே அமெரிக்காவுடனான அதன் கூட்டணியில் தங்கி இருக்கும் ஒன்றாகும்.

லண்டனை தளமாகக் கொண்ட மத்திய கிழக்கு செய்திகளின் ஆசிரியர் டேவிட் ஹெர்ஸ்ட், தெஹ்ரான் ஹோர்முஸ் ஜலசந்தி மீது தனது கட்டுப்பாட்டை விரிவு படுத்தியுள்ளது. அதேவேளை அரபு உலகத்தை அதன் பின்னால் ஒன்றிணைத்து, பிராந்திய மேலாதிக்கம் பற்றிய நெதன்யாகுவின் கனவுகளை சுக்குநூறாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

நமது முழு வரலாற்றிலும் இதுபோன்ற இராஜதந்திர பேரழிவு ஒரு போதும் இருந்ததில்லை என்று இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் யெய்ர் லாப்பிட் தெரிவித்துள்ளார்.

“நமது தேசிய பாதுகாப்பின் மையப் பகுதி குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டபோது, இஸ்ரேல் அந்தப் பேச்சுவார்த்தை மேசையில் கூட இருக்கவில்லை” என்று லாப்பிட் சுட்டிக் காட்டியுள்ளார்.

நெதன்யாகுவுக்கு அது இன்னும் தெரியாது. தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியாவையும் கட்டுப்படுத்தும் ஒரு அகண்ட இஸ்ரேல் பற்றிய அவரது தூரநோக்கு ஈரானில் முட்டி மோதி நொறுங்கியுள்ளது.

அகண்ட இஸ்ரேல் என்பது எந்தவொரு அரபியும் அங்கு வாழ முடியும் என்ற ஒரு உண்மை நிலை அல்ல. மேலும் மிகவும் சுறுங்கிவிட்ட இஸ்ரேல், விரைவில் அதன் படைகள் ஆக்கிரமித்துள்ள அனைத்து சுற்றுப்புறங்களிலும் வலுவிழப்பதைக் காணக் கூடியதாக இருக்கும்.

தமது சொந்த மக்களை அடக்கி ஆளுவதிலும், தடுத்து நிறுத்துவதிலும் தீவிரமாகச் செயற்படும் அரபுலக சர்வாதிகாரிகளின் வலையமைப்பை, இஸ்ரேல் வரலாற்று ரீதியாக நம்பியுள்ளது.

இருந்தாலும் அது நீண்ட காலத்திற்கு வேலை செய்யும் ஒரு சூத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது இப்போது உணரப்பட்டுள்ளது. முழு அரபுலக பிராந்தியத்தினதும் அரசியல் நிலைமையும், நிறமும் மாறுவதற்கு, இன்னும் ஒரு அரபு சர்வாதிகாரம் வீழ்ச்சி அடைந்தால் போதும் என்பதே இன்றைய நிலையாகும்.

2011ஆம் ஆண்டில் இடம்பெற்ற எகிப்திய புரட்சியின் முக்கிய நபர்களில் ஒருவரான முகமது எல் பராதே என்பவர், அரபு வசந்தம் இன்னும் செத்து மடியவில்லை என்று கூறி உள்ளார். அது செயலற்ற நிலையில் உள்ளது.

ஆனால் அதேவேளை வறுமை, அதிகாரமின்மை, அநீதி மற்றும் ஊழல் ஆகியவற்றின் நிலைமைகள் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் கவிழ்க்கப்பட்டபோது இருந்ததை விட இன்று மிகவும் அதிகரித்துள்ளது. அது வெளிப்படையாகத் தெரிகின்றது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஒருவேளை அரபு வசந்தம் மீண்டும் வெடித்தால், 2013இல் செய்ததைப் போல் அதை நசுக்குவதற்கோ, அல்லது அதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி ஒழுங்கமைப்பதற்கோ, தேவையான வலுவான நிலையில் சவுதி அரேபியாவோ அல்லது ஐக்கிய அரபு அமீரகமோ இன்று இல்லை. சிரியாவிலிருந்து யெமன் முதல்  சூடான் வரை இஸ்லாமிய உலகம் முழுவதிலுமிருந்தும் வரும் இஸ்லாமிய போராளிகளுக்கு இஸ்ரேலின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகள் அன்றைய நிலையில் பரவலாக திறந்திருக்கலாம்.

எனவே ஈரானை அதன் சிதைவுகளுக்குள் விட்டுவிடுவதை டிரம்பும் நெதன்யாகுவும் ஒருபோதும் தங்களது இராணுவ மகிழ்ச்சிக்குரிய தருணங்களாகவோ அல்லது புத்திசாலித்தனமான ஒரு விடயமாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. காரணம் அவர்களின் வெற்றியின் ஆயுள் நிச்சயமாக குறுகிய காலமே நீடிக்கும்.

தீப்பிழம்புகளின் நடுவில் உள்ள ஒரு பிராந்தியம் பற்றி யாரோ ஒருவருடைய அரசியல் கணிப்புகள் உறுதியாகின்றது என்றால், அது நிச்சயமாக ஹமாஸின் முன்னாள் தலைவரான யஹ்யா சின்வாரின் கணிப்பாகத் தான் இருக்கும். அவர் 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கினார். அவர் அன்று தொடங்கியது சூதாட்டம் போல் இருந்தாலும், இப்போது மிகச் சரியாகத் தெரிகின்றது. நூற்றாண்டு கால பழமையான மோதல்கள் மீண்டும் மீண்டும் ஒரே விதமாக இருக்காது என்பது தான் அந்தக் கணிப்பு.

லெபனானில் இருந்து இஸ்ரேல் விலக வேண்டும் என்பதில் ஈரான் மிகவும் தீவிரமாக உள்ளது என்றும், இதன் காரணமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கட்டுரையாளர் ஜோ லாரியா குறிப்பிட்டுள்ளார். இதனால் வாஷிங்டனில் உள்ள உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் கிட்டத்தட்ட இதுவரை கேள்விப்படாத வழிமுறைகளில் இறங்க இஸ்ரேலை நிர்ப்பந்தித்து வருகின்றார்கள்.

லெபனான் மீது தாக்குதல் நடத்தியதற்காக நெதன்யாகுவை டொனால்ட் டிரம்ப் திட்டி உள்ளார். “நான் இல்லையென்றால் நீங்கள் சிறையில் இருந்திருப்பீர்கள்.  நான் உங்கள் ஆசனத்தை காப்பாற்றி உள்ளேன். இப்போது அனைவரும் உங்களை வெறுக்கின்றார்கள். இதன் காரணமாக அனைவரும் இஸ்ரேலையும் வெறுக்கின்றார்கள்” என்று அவர்  கூறி உள்ளார்.

கட்டுரையாளர் கிறிஸ் ஹெட்ஜஸன் என்பவரின் கூற்றுப்படி, அமெரிக்கா ஈரானுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளை, இஸ்ரேல் நாசப்படுத்துகின்றது. மேலும் லெபனான் மீதான அதன் தாக்குதல்களை நிறுத்த மறுப்பதன் மூலமும், தெற்கில் அதன் ஆக்கிரமிப்பை கைவிட மறுப்பதன் மூலமும் இஸ்ரேல், அதற்கு கடைசியாக எஞ்சியுள்ள முக்கியமான நட்பு நாடுகளையும் அந்நியப்படுத்துகின்றது.

ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை நிரந்தரமாக மூடி, சர்வதேசப் பொருளாதாரத்தை பூகோள ரீதியாக மந்த நிலைக்குள் தள்ளுவதைக் காணக் கூடிய ஒரு பிராந்திய மோதலை, மீண்டும் ஏற்படுத்துவதில் இஸ்ரேல் முனைப்பாக உள்ளது. மேலும் அது காசாவில் அதன் இனப்படுகொலையைத் தொடர்வதிலும் குறியாக உள்ளது.

இஸ்ரேல் இனவெறி மற்றும் இனப்படுகொலை வன்முறைகளால் மாசடைந்து அசிங்கப்பட்டுள்ளது. ஒருவகையான வெறுக்கத்தக்க மேலாண்மை உணர்வால், கட்டுண்டு கண்மூடித்தனமாகவும் உள்ளது.

இஸ்ரேலிய நலன்களுக்கு சேவை செய்யும் வகையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் வளைவுகளை உருவாக்க, தங்கள் செல்வத்தைப் பயன்படுத்தும், அமெரிக்காவில் உள்ள ஊழலில் ஊறிப்போன, சியோனிச பில்லியனர்களின் வர்க்கத்தால் இது கட்டுப்படுத்தப்படுகின்றது.

இது அணு ஆயுத வளத்தையும் கொண்டுள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகள் பலமுறை அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என  அச்சுறுத்தியும் உள்ளனர்.

இஸ்ரேல் இந்தப் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது.  அது தனக்குத்தானே ஒரு அச்சுறுத்தலாகவும் உள்ளது. மேலும் அது ஒரு அவமானமானத்தின் சின்னமாகவும்  இருக்கின்றது.

இந்தப் பின்னணியில் தான் எதிர்ப்பார்க்கப்பட்டது போல், ஏற்கனவே ஆட்டம் கண்டுள்ள அமெரிக்க – ஈரான் சமாதான புரிந்துணர்வு ஏற்பாடுகள் 2026 ஜூன் 26ல், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அடுத்து மீண்டும் ஆட்டம் கண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பேஸ்புக்கில் AI மூலம் இயங்கும் போலி பெண் கணக்குகள்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட...

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை எட்டியது!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 63,835 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம்...

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்: பிரதமர்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம்...

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08)...