மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடலுக்கு, லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்டத் தளபதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் நேரில் சென்று தங்களது அஞ்சலியைச் செலுத்தியுள்ளனர்.
தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்று வரும் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில், லெபனான் எதிர்ப்பியக்கத்தின் மறைந்த வரலாற்றுத் தலைவர்களான செய்யித் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஹாஜ் இமாத் முக்னியே ஆகியோரின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
அவர்கள் ஈரானிய மக்களுடனும், அதிகாரிகளுடனும் தங்களது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொண்டதோடு, மறைந்த தலைவருக்கு இறுதி மரியாதையையும் செலுத்தினர்.
கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியின் மீது ஈரானின் தேசிய கொடி போர்த்தப்பட்டுள்ளதும், கருப்பு நிற உடை அணிந்த லட்சக்கணக்கான மக்கள் கமேனிக்கு அஞ்சலி செலுத்த அங்குத் திரண்டுள்ளனர்.
இத்துடன், நாளை நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ இறுதிச்சடங்கு நிகழ்வுகளில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
இதையடுத்து, தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கமேனியின் உடல் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு வரும் ஜூலை 9 ஆம் தேதி மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிராந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான் உச்ச தலைவரின் இந்த மறைவு நிகழ்வில், மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த முக்கியப் போராட்டக் குழுக்களின் தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
