நாற்பதாவது வயதிலேயே, நளீமிய்யாவைத் தாபிக்கவெனத் தனது சொத்து, செல்வம் முழுவதனையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்த நளீம் ஹாஜியாருக்கு, உறுதுணையாக சீனன்கோட்டை மக்களும் ஆலோசனை வழங்க உலமாக்களும் வழிகாட்ட அறிஞர்களும் இருந்தனர்.
ஆனால் இக்கலாபீடத்திடத்தை ஆரம்பிப்பதில் பல சவால்கள் இருந்தன. இலங்கையில் இது முதல் முயற்சி என்பது அதற்கான பிரதான காரணிகளுள் ஒன்றாகும்.
அன்றைய இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருந்த விரல்விட்டு எண்ணக்கூடிய புத்திஜீவிகளுள் பெரும்பாலானோர் ஜாமிஆவைத் தாபிப்பதற்கு பங்களிப்பு நல்கினர்.
அறிஞர் எ. எம்.எ. அஸீஸ், அறிஞர் தாஸீன் , மஸ்ஊத் ஆலிம், கலாநிதி ஷுக்ரி, ஷாகுல் ஹமீத் (பஹ்ஜி), அல்ஹாஜ் ஏ. சீ. ஏ. வதூத், நீதிபதி ஏ. எம். அமீன், மெளலவி ஏ. எல். எம். இப்ராஹிம், நூலகர் எஸ்.எம். கமால்தீன், மெளலவி எம்.ஜே.எம். றியால் போன்றோர் அவர்களுள் முக்கியமானோராவர்.
இவர்களுள் ஆரம்பம் முதல் தனது இறுதி மூச்சுவரை ஜாமிஆ வளாகத்துக்குள் நின்று அதனை வழிநடத்தியவர் அதன் முதல் அதிபர் தாஸீன் ஆவார்.
அன்னார் இறந்தபின்னர் ஜாமிஆவுக்கென இன்னுமொரு அதிபரை இலங்கையில் இறுதிவரை இனங்கண்டுகொள்ளமுடியாமால் போனமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஜாமிஆவுக்கான பொருத்தமான பொருத்தமான கலைத்திட்டம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் ஐவர் அடங்கிய குழு 1972 இல் பாகிஸ்தான் பயணமாகியது. மெளலவி யூ.எம். தாஸின், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றுக்கொண்டிருந்த எம்.ஏ.எம். ஷுக்ரி, சீனன்கோட்டையில் கற்றுத் தேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்ட ஹிப்பதுல்லாஹ் ஹாஜியார், ஏ.ஆர்.எம். சுலைமான் ஹாஜியார், பாயிஸ் ஹாஜியார் ஆகிய இத்தூதுக்குழுவை வழிநடத்தியவர் தாஸீன் (நத்வி) ஆவார்.
“கோழி மேய்த்தாலும் கவர்மெண்டில் மேய்க்க வேண்டும்” என்றிருந்த காலப்பகுதியில்; தனது ஆசிரியத் தொழிலையும் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியையும் விட்டுவிட்டு; ஜாமிஆவின் தாபகர் நளீம் ஹாஜியாரின், “அல்லாஹ்வுக்காக எமக்கு உதவுங்கள்” என்ற ஒரேவார்த்தைக்காக; இறைப் பொருத்தம் கருதி ஜாமிஆவைப் பொறுப்பேற்பதற்காகத் தம்மை அர்ப்பணித்தவர் அவர்.
பல்மொழிப் புலமைமிக்க அறிஞர் தாஸீனின் வீட்டு நூலகத்தில் இலக்கியம், நாவல்கள், வரலாறு, பொருளியல், புவியியல், தத்துவம் போன்ற 2500 கும் மேற்பட்ட தமிழ், சிங்களம், ஆங்கிலம், அறபு, உருது என பல்வேறு மொழி நூல்கள் இருந்தன.
அன்றைய இலங்கையில் பரந்த வாசிப்புப் பழக்கமும் புத்தக சேகரிப்பும் கொண்ட, முன்னணியில் இருந்த மெளலவி அவர் என்பது மிகையல்ல. அவரது நூல்கள் ஜாமிஆவுக்கே அன்பளிப்பு செய்யப்பட்டன.
தாபக அதிபர் தாஸீன் அவர்களால் அறிவூட்டி வளர்த்தெடுக்கப்பட்டோரே முதல் தொகுதியில் “ஷேய்க்”பட்டம் பெற்ற பதினைந்துபேருமாவர். அவர்கள் அனைவரும் ஜாமிஆவில் கல்விசார், சாரா ஊழியர்களாக அன்று இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்துவந்த சிலரும் இவ்வரிசையில் அடங்குவர். ஜாமிஆவின் மையப் பொறுப்புக்களில் அவர்கள் இருந்ததும் இருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஜாமிஆ நளீமிய்யாவுக்கென தனியான கலாசாரம் ஒன்றை ஆரம்பித்துவைத்து, கட்டியெழுப்பிய பெருமை அதிபர் தாஸீன் அவர்களையே சாரும்.
மத்ரஸா மாணவர்கள் காற்சட்டை அணியாத காலத்தில், ஜாமிஆவின் சீருடை வடிவமைக்கப்பட்டு அதனை எவ்வாறு அணியவேண்டும் என்பதை முதலில் சொல்லிக்கொடுத்தவர் அவர்தான். மாணவர்களுக்கிடையில் நாவல்கள் உட்பட வாசிப்புக் கலாசாரத்தை அறிமுகப்படுத்தி ஊக்குவித்தவரும் அவர்தான்.
அதிபர் தாஸீன், ஜாமிஆவுக்கென ஓர் எழுச்சிபூர்வ கீதத்தை இயற்றி, மெட்டமைத்து, மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார். மரபுகளைப் பேணும் பேராதனைப் பல்கலைக்கழகம் உட்பட, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் இவ்வாறான கீதங்கள் பட்டமளிப்பு விழா மற்றும் முக்கிய நிகழ்வுகளில் இசைக்கப்படுகின்றன.
காலைக்கூட்டத்தை, பிரதான விரிவுரை மண்டபத்துக்கு முன்னாலுள்ள முற்றவெளியில், ‘வத்தகுல்லாஹ் வயுஅல்லி முகுமுல்லாஹ்’ என்ற மகுடவாசகம் பொறிக்கப்பட்டுள்ள பதாகையின்கீழ் ஜாமிஆவின் முதல்நாளன்றே அன்னார் ஆரம்பித்துவைத்தார்.
அதில் சுட்டென் வரிசைப்பிரகாரம் மாணவர்களை உரையாற்றப் பயிற்றுவித்ததுடன் பல்லம்சங்கள் பொருந்திய ‘மாணவர் மஜ்லிஸும்’ அவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாணவர்களின் சிந்தனைத் திறன்களை வளர்த்து எழுத்தத்தாற்றலை ஊக்குவிப்பதற்கென அதிபர் தாஸீன் ஆரம்பித்துவைத்த ‘அல் பிக்ர்’ சஞ்சிகை இன்று ‘இஸ்லாமிய சிந்தனையாகப் பரிணமித்துள்ளதுடன் அவர் ஆரம்பித்துவைத்த ‘தினச் செய்தி’ (அஹ்பாருள் யவ்ம்) காலப் போக்கில் ‘ராபிதா கலமிய்யா’வானது.
இன்றைய டிஜிடல் யுகத்தில், ‘ஈ – ராபிதா கலமிய்யா’ எனவும் அது உருமாற்றம் பெற்றுள்ளது.
ஆரம்பகாலங்களில் ஜாமிஆ வளாகத்துக்குள் விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாத நிலையிலும்கூட மாணவர்களை கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுத்தி, போட்டிகளையும் நடத்தி இணைப்பாடவிதான செயற்பாடுகளை அவர் ஊக்குவித்தார்.
அன்றைய மத்ரஸாக் கலாசாரத்துடன் இவற்றை உரசி ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியுள்ளது. அன்று அவர் வைத்த ஆரம்பப் புள்ளியே இன்றைய ஜாமிஆவுக்குள் பல்வேறு கோலங்களாகப் பரிணமித்து விரிவடைகின்றது.
ஜாமிஆ நளீமிய்யா 19. 08. 1973 அன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.. நளீம் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்ற அங்குரார்பணக்கூட்டத்துக்கு கல்வியமைச்சர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். உள்நாட்டு வெளிநாட்டுப் பிரமுகர்கள், கல்விமான்கள் பொதுமக்கள் என ஆயிரக்கக்காணோர் அங்கு திரண்டிருந்தனர்.
ஆற்றொழுக்கு நடையில் பேசவல்ல தாஸீன் அவர்கள் அன்று அங்கு ஆற்றிய உரை, ஜாமிஆ ஆரம்பிக்கப்படுவதன் நோக்கம் அதன் எதிர்பார்க்கை என்பனவற்றை விளக்குவதாக இருந்தது.
“நமது வரலாற்றில் அஹ்மத் அறாபி பாஷா, அறிஞர் சித்திலெப்பை, அப்துல் அஸீஸ் போன்றோரையும் அவர்கள் ஆற்றிய சேவைகளையும் இன்று நாம் நினைவுகூருகிறோம்.
மஹரகம கபூரிய்யா, காலி பஹ்ஜதுல் இப்ராஹிமிய்யா, புத்தளம் காஸிமிய்யா, போன்ற மத்ரஸாக்களையும் அவைகள் ஆற்றிவரும் சேவைகளையும் இலங்கை முஸ்லிம்கள் என்றுமே மறக்கமுடியாது. இக்கலாபீடங்கள் தோற்றுவித்த உலமாக்களால்தான், இன்று ஓரளவாவது முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமியப் பற்று காணப்படுகின்றது. இதுபோன்ற ஒரு நந்நாளில் இவற்றை நினைவுகூருவது நமது கடமையாகும்.
இன்றைய சமுதாயத்தின் நவீன தேவைகள் என்ன, எதிர்காலத் தேவைகள் என்ன, எத்தகைய உலமாக்களால் எமது சமுதாயம் என்றும் பலனடையும் என்பதையெல்லாம் எடைபோட்டு, அதற்கேற்ற உலமாக்களை உருவாக்கும் நோக்குடனேயே இந்த ஜாமிஆ நளீமிய்யா கலைக்கூடம் இன்று ஆரம்பித்துவைக்கப்படுகின்றது.
இதிலிருந்து உருவாகுவோரின் கைகளில் இந்தச் சமுதாயத்தின் தலைமைப் பீடத்தை ஒப்படைத்து, நாம் எல்லோரும் சந்தோசமாகக் கைகட்டி நின்று, அவர்கள் எம்மை எவ்வாறு வழிநடாத்துகின்றார்கள் எனப் பார்க்க ஆசைப்படுகின்றோம். அல்லாஹ்வின் அன்பினாலும் அருளினாலும் மட்டுமே இந்தத் தாபனத்தைக் கொண்டுநடத்தலாம் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு நீங்கள் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்”.
இதுவே அன்று அன்னார் ஆற்றிய உரையின் பிரதான அம்சங்கள். ஆனால் ஜாமிஆ உருவாக்கிய அந்த ஆளுமைகளைப் பார்க்க ஆசைப்பட்ட அவருக்கு, அது கிட்டவில்லை. நீர்கொழும்பு, பலகத்துறையில் 1932 ஆவனித் திங்கள் 27 ஆம் நாளன்று அவதரித்த அன்னார், தனது நாற்பத்தியைந்தாவது வயதில் 18.07.1977 திங்கள் அதிகாலை ஆறுமணியளவில் தன்னைப் படைத்த றப்பின்பால் மீண்டுவிட்டார்.
தனது உடலியல் குறைபாட்டையும் பொருட்படுத்தாது சமூகப் பணியை முதன்மைப்படுத்தித் தனது இறுதிக்காலத்தை ஜாமிஆவுக்காக அர்ப்பணித்ததுடன் ஜாமிஆவின் இலக்கு நோக்கிய பயணத்தின் விதையை குறுகிய காலத்துக்குள் விதைத்துச்சென்ற தாஸீன் மெளலவி, ஜாமிஆ நளீமிய்யாவின் தாபக அதிபராவார்.
இஸட். ஏ. ஸன்ஹிர்
உதவிக் கல்விப் பணிப்பாளர்
(ஓய்வுநிலை)
