ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (24) அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் பிரதிவாதிகள் தரப்பின் வாதங்கள் இன்று மாலை சுமார் 6.00 மணியளவில் நிறைவடைந்துள்ளன. மேலும், இரு தரப்பினரும் தங்களது எழுத்துமூல வாதங்களை செப்டெம்பர் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நவரத்ன மாரசிங்க, நீதிபதிகளான சுஜீவ நிஷங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பின் வாதங்கள் கடந்த 13ஆம் திகதி பிற்பகல் நிறைவடைந்திருந்தன.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், 25 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.
