பிரிட்டனின் நீர் விநியோகத் துறை முறைப்படுத்தும் அரசு சார்பற்ற அமைப்பான Ofwat (Water Services Regulation Authority), தனது நீர் சேமிப்புத் திட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் தொழுகைக்கு முன் மேற்கொள்ளும் ‘வுளு’ சடங்கின் போது பயன்படுத்தும் தண்ணீரின் அளவைக் குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
Ofwat அமைப்பின் நிதியுதவியுடன் செயல்படும் இந்த நீர் சேமிப்புப் பிரச்சாரத்தில், முஸ்லிம் மற்றும் தென்கிழக்கு ஆசியச் சமூகங்களைக் குறிவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் அரிசி கழுவும் போது குறைந்தளவு தண்ணீரைப் பயன்படுத்துவது போன்ற வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், சிறுபான்மைச் சமூகங்களை மட்டும் இலக்கு வைத்து இத்தகைய பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்து அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வாடிக்கையாளர்களின் பணத்தை இதற்காகப் பயன்படுத்துவது ஏன் என்றும், அதற்குப் பதிலாக நீர் விநியோகக் குழாய்களில் ஏற்படும் பிரம்மாண்ட கசிவுகளைச் சரிசெய்வதில் நீர் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
