சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது ‘அப்துல் அஜீஸ் மன்னர் சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில்’ (King Abdulaziz International Holy Qur’an Competition) நைஜீரிய நாட்டின் கொம்பே மாநிலத்தைச் சேர்ந்த மரியம் இப்ராஹிம் தாஅஸுமி என்ற இளம் பெண் அகில உலக அளவில் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அபுபக்கர் சித்தீக் இஸ்லாமியப் பள்ளியின் மாணவியான மரியம், 60 ஹிஸ்ப் (Hizb) முழுத் திருக்குர்ஆன் மனனம், ஓதுதல், தஜ்வீத் மற்றும் தஃப்சீர் (விரிவுரை) ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய கடினமான பிரிவில் போட்டியிட்டுப் பல உலக நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இப்போட்டி தொடங்கப்பட்டு கடந்த 46 ஆண்டுகளில் முதன்முறையாக இம்முறையே பெண் போட்டியாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
அந்த வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போட்டியில் முதன்முதலாகப் பங்கேற்று உலகளவில் முதலிடம் பிடித்த முதல் பெண் என்ற பெருமையை மரியம் பெற்றுள்ளார்.
மரியத்தின் இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கொம்பே மாநில ஆளுநர் முஹம்மது யஹாயா அவருக்குச் சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவிலான அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பிடித்து, சர்வதேச மேடையில் நைஜீரியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள மரியத்தை நேரில் சந்தித்துக் கௌரவிக்கவுள்ளதாகவும், அவரது இந்த வெற்றி பல இளம் பெண்களுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் என்றும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
