கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக “தூய இலங்கை” எனும் மகுடம் தாங்கி ஊடகப் பணியில் கால்பதித்துச் செயலாற்றி வரும் பஹன மீடியா (Pahana Media) குழுமத்தின் நிர்வாக உறுப்பினர்கள், அதன் நிறுவனத் தலைவர் அஸ்ஸெய்யித் ஸாலிம் ரிஃபாய் மௌலானாவின் தலைமையில் இன்று (03) காலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) தலைமையகத்தில் ஜம்இய்யாவின் குழுவினரைச் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் ACJU சார்பாக ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷைக் அர்கம் நூராமித், ஊடகப் பொறுப்பாளர் அஷ்ஷைக் புர்ஹான், அதன் முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷைக் எம்.எச்.எம்.நவவி, அஷ்ஷைக் எம்.எச்.எம். தாஸீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பஹன மீடியா ஊடகப் பரப்பிலும், நூல் வெளியீட்டுத் துறையிலும், சகவாழ்வுப் பணிகளிலும் மேற்கொண்டு வருகின்ற பரந்துபட்ட பணிகள் தொடர்பான அறிமுகம் ஜம்இய்யாவிற்கு வழங்கப்பட்டதோடு, எதிர்காலத்தில் இரு தரப்பினரும் ஊடகப் பரப்பிலும் ஏனைய விவகாரங்களிலும் ஒத்துழைப்போடு செயல்படுவது சம்பந்தமாகவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
இதன்போது, பஹன மீடியாவின் கல்விப் பகுதியினால் தயாரிக்கப்பட்டுள்ள உலமாக்களுக்கான இஸ்லாமிய சொற்பிரயோகங்கள் பயன்பாடு தொடர்பான செயலமர்வு பற்றிய அறிக்கையும் ஜம்இய்யாவின் செயலாளரிடம் பஹன மீடியாவின் தலைவரால் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, அண்மையில் பஹன பப்ளிகேஷன்ஸினால் வெளியிடப்பட்ட, கலாநிதி ரவூஃப் ஸைன் அவர்களால் தமிழில் எழுதப்பட்டு கலாநிதி தம்மிக ஜயசிங்க அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ நூலின் பிரதியும் இதன்போது ஜம்இய்யாவின் நூலகத்திற்காக வழங்கி வைக்கப்பட்டது.
பஹன மீடியாவின் சார்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷ்ஷைக் முஜீப் ஸாலிஹ், நிர்வாக உறுப்பினர்களான அஷ்ஷைக் மிஹ்லார் நளீமி, முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஷாம் நவாஸ், ஆலோசகர் கலாநிதி தம்மிக ஜயசிங்க, NewsNow நிர்வாகப் பொறுப்பாளர் ஏ.எம். முவாஸ் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

