குழந்தைகளுடனான உடல்தொடர்பு குறித்த உரையாடல்களில் அவர்களின் சம்மதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சிறுவர் உரிமை ஆர்வலர் மருத்துவர் துஷாரா விக்கிரமநாயக தெரிவித்துள்ளார்.
பாரம்பரியமாகப் பேசப்படும் ‘நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்’ (Good touch, bad touch) என்ற கருத்தாக்கத்துடன், ஒருவரின் தொடுதலை ஏற்றுக்கொள்வதில் குழந்தைக்கு இருக்கும் விருப்பமும் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள் குழந்தைகளுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மருத்துவர் துஷாரா, குழந்தையின் அனுமதியின்றி செய்யப்படும் எந்தவொரு உடல்தொடர்பும் பொருத்தமற்றதாகவே கருதப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஒரு புகைப்படத்தில் உள்ள விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு குறித்த கவலைகளை அது வெளிப்படுத்துவதாகவும் விமர்சித்த அவர், இரண்டாவது புகைப்படத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில்:
‘ஸ்டாப் சைல்ட் குரூயல்டி டிரஸ்ட்’ (Stop Child Cruelty Trust) சார்பில் சுமார் 40,000 கையெழுத்துகள் அடங்கிய மனு நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒரு சிறுவனிடம், “நான் உன் தோள் மீது கை வைக்கலாமா?” என்று அனுமதி கேட்ட பின்னரே தோளில் கை வைத்தார்.
அரசியல்வாதி ஒருவர் குழந்தையின் அனுமதியைக் கேட்டது எனக்கு வியப்பளித்ததுடன், சிறுவர்களின் உரிமையையும் சம்மதத்தையும் மதிப்பதற்கு இதுவொரு நல்ல உதாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெறும் ‘நல்ல தொடுதல்’, ‘கெட்ட தொடுதல்’ எனப் வகைப்படுத்துவதைத் தாண்டி, குழந்தையின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பதே முக்கியச் செய்தி.
குழந்தைகளுக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என முடிவெடுக்கும் உரிமையை வழங்குவது அவர்களை பலப்படுத்துவதுடன், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தையின் விருப்பத்திற்கு மாறாகச் செய்யப்படும் எந்தவொரு தொடுதலும் ‘கெட்ட தொடுதல்’ ஆகவோ அல்லது உரி மீறலாகவோ மாறக்கூடும்.
மேலும், தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையை நடைமுறைப்படுத்தத் தவறிய அதிகாரிகளை விமர்சித்த அவர், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் மறுக்கும் உரிமையைப் புரிந்துகொள்ளாமல் சிறுவர் பாதுகாப்பு திட்டங்களைச் செயல்படுத்துவது பயனற்றது என்றார்.
வயதுக்கேற்ற பாலினக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் உட்பட பெரியவர்கள் அனைவரும் குழந்தைகளின் தனிப்பட்ட எல்லைகளை மதிப்பது குறித்து அதிக விழிப்புணர்வு பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
