மக்கா புனித மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலின் அதிகாரப்பூர்வ முஅத்தினான (தொழுகைக்கான அழைப்ப விடுப்பவர்) ஷேக் இப்ராஹீம் பின் ஆதில் ஹம்ஸா அல்-மதனி, திங்கள்கிழமை (செப்டம்பர் 21) அதிகாலை காலமானார்.
அவரது மறைவுக்கு இரு புனிதப் பள்ளிகளின் நிர்வாகத்தினரும், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
‘இன்சைட் தி ஹரமைன்’ (Inside the Haramain) வெளியிட்ட காணொளியில், ரபி உல் அவ்வல் 11 (1448 AH) திங்கள்கிழமை அன்று மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் கஃபாவை நோக்கியபடி அவர் ஓதிய கடைசி பாங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த ஷேக் இப்ராஹீம் அல் மதனியின் ஜனாஸா தொழுகை (இறுதிப் பிரார்த்தனை) திங்கள்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு மக்கா புனித ஹரம் ஷரீஃபில் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து அவரது உடல் அல்-முஅல்லா (Al-Mualla) மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
யார் இந்த ஷேக் இப்ராஹீம் அல் மதனி?
1976 ஆம் ஆண்டு மதினாவில் பிறந்த அல் மதனி, ஒரு மார்க்கப் பின்னணி கொண்ட குடும்பத்தில் வளர்ந்தார். குர்ஆனை மனனம் செய்த அவரது பாட்டனார், இவரது வாழ்வியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். பின்னர் அவர் குர்ஆன் மற்றும் மார்க்கக் கல்வியை முறைப்படி கற்றார்.
தனது 15 ஆவது வயதில் மதினாவிலுள்ள ஒரு உள்ளூர் பள்ளிவாசலில் முஅத்தினாகப் பணியைத் தொடங்கிய அவர், கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை தனது அண்டை வீட்டார் மூவருடன் சுழற்சி முறையில் பாங்கு சொல்லி வந்தார்.
பின்னர் கற்பித்தல் பணிக்காக மதினாவிற்கு வெளியே சென்றதால் அப்பணியிலிருந்து சிறிது காலம் விலகியிருந்த அவர் (2007-08) ஆம் ஆண்டில் ‘மஸ்ஜிதுல் மத்தா’ பள்ளிவாசலில் மீண்டும் பாங்கு சொல்லத் தொடங்கினார்.
அங்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையின் காரணமாக, (2017-18) ஆம் ஆண்டில் மக்கா புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலின் அதிகாரப்பூர்வ முஅத்தினாக நியமிக்கப்பட்டார்.
மக்கா மற்றும் மதினாவின் தாக்கம்:
மதினாவில் வளர்ந்ததால், அம்மாநகரக்கே உரித்தான பாரம்பரிய பாங்கு பாணியை அல் மதனிநன்கு அறிந்திருந்தார். அதேவேளை தனது தந்தையாருடன் மக்காவிற்குச் சென்று வந்ததன் மூலம் மக்கா பாணியிலான பாங்கு முறையையும் கற்றுக்கொண்டார்.
மக்கா ஹரம் ஷரீஃபின் 24 முதன்மை முஅத்தின்களில் ஒருவராகச் செயல்பட்ட இவர், தினமும் ஐந்து நேரத் தொழுகைகளுக்கும், ஃபஜ்ர் நேரத்துக்கான முதல் அழைப்புக்கும் சுழற்சி முறையில் பாங்கு சொல்லி வந்தார்.
குறிப்பாக அவரது ஃபஜ்ர் பாங்கு, தக்பீரத் மற்றும் இமாமின் தக்பீர்களை ஒலிபெருக்கி மூலம் தொழுகையாளர்களுக்குத் தெரிவிக்கும் ‘தப்லீக்’ பணி ஆகியவற்றால் அவர் மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டார்.
ஹரம் ஷரீஃபில் ஒலித்த முதல் பாங்கு:
முன்னதாக ‘அஷ்ரகத்’ (Ashraqat) பாட்காஸ்ட் நேர்காணலில் பேசிய ஷேக் அல் மதனீ, மக்கா ஹரம் ஷரீஃபில் தான் முதன்முதலில் பாங்கு சொன்ன தருணத்தை நினைவு கூர்ந்திருந்தார்.
கஃபாவைச் சுற்றி தவாஃப் செய்து கொண்டிருந்த ஹாஜிகள் தனது குரலைக் கேட்டுத் தொழுகைக்கு ஆயத்தமாவதைக் கண்டபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியதாகக் குறிப்பிட்ட அவர், “இந்த புனிதமான இடத்தில் எனது குரலை உயர்த்த நான் யார்?” என்று இறைவனுக்கு நன்றி கூறியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
மேலும் மக்கா மற்றும் மதினா ஆகிய இரு புனித நகரங்களிலும் பாங்கு சொல்லப்படும் முறைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் குறித்தும் அவர் அதில் பகிர்ந்துகொண்டார்.
பூமியின் மிகப்பரிசுத்தமான இடத்தில் தொழுகைக்கான அழைப்பை விடுக்கும் பெரும் பாக்கியத்துடனே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.
ஒரு மனிதன் தனது வாழ்வின் இறுதியை ஒரு மகத்தான மார்க்கப் பணியுடன் முடிப்பதும், அவனது குரல் தொழுகையோடு லயித்திருக்கும் நிலையில் இறைவனைச் சென்றடைவதும் எத்துணை அழகானது!
மரணம் என்பது வாழ்வின் முடிவுதான்; ஆனால் அவர் செய்த நற்பணிகளின் வடு என்றும் சான்றாக நிலைத்திருக்கும். வல்ல அல்லாஹ் அவரது குற்றங்களை மன்னித்து, அருள் புரிந்து, அவர் விடுத்த கடைசி தொழுகை அழைப்பை நற்பேறுகளுடனான இறை சந்திப்பின் நற்செய்தியாக ஆக்கி அருள்வானாக.
