துருக்கியின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவருமான நஜ்புத்தீன் எர்பகான் (Necmettin Erbakan) அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், சிறப்பு நினைவு வெள்ளி நாணயத்தை துருக்கியின் திறைசேரி மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அச்சுக்கூடம் (Turkish Mint / Printing House) வெளியிட்டுள்ளது.
துருக்கியின் அரசியல் வரலாறு மற்றும் பொருளாதார மறுமலர்ச்சியில் எர்பகான் ஆற்றிய பங்களிப்பையும், அவரது தொலைநோக்குப் பார்வையையும் கௌரவிக்கும் வகையில் இந்த சிறப்பு நாணயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தூய வெள்ளியால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நினைவு நாணயத்தின் ஒரு பக்கத்தில் நஜ்புத்தீன் எர்பகானின் உருவப்படமும், மறுபக்கத்தின் சிறப்பு குறியீடுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயம் நாணய சேகரிப்பாளர்கள் (Numismatists) மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
துருக்கியின் ‘மில்லியு கோருஷ்’ (Milli Görüş) இயக்கத்தின் நிறுவனரான எர்பகான், நாட்டின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஆற்றிய சேவைகள் இன்றும் நினைவு கூரத்தக்கவை என்பது குறிப்பிடத்தக்கது.
