அசாம் மாநிலத்தில் அரச மற்றும் வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட இரு நாள் அதிரடி அகற்றும் நடவடிக்கையின் போது, 1,100க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் பலவந்தமாக இடிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாம் அரசாங்கம் நாகோவ் மாவட்டத்தில் உள்ள லுதுமாரி லோங்ஜாப் காப்பு வனப்பகுதியில் 600-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களின் வீடுகளை ஞாயிற்றுக்கிழமை அன்று இடித்துத் தள்ளியது. இது அகற்றும் நடவடிக்கையின் இரண்டாவது நாளாகும்.
முன்னதாக சனிக்கிழமை மூன்று மாவட்டங்களில் மொத்தம் 547 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் நாகோவ் மாவட்டத்தில் 336 குடும்பங்களும், கோலகாட் மாவட்டத்தில் 59 குடும்பங்களும், ஹோஜாய் மாவட்டத்தில் 152 குடும்பங்களும் அடங்கும்.
இந்த நடவடிக்கையானது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் பெங்காலி முஸ்லிம்கள் என்றும் ‘Scroll’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
லுதுமாரி பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தாங்கள் பல தசாப்தங்களாக இந்த காப்பு வனப்பகுதியில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தனர். இருப்பினும், நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுகளைப் பகுதிவாசிகள் மறுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று வீடுகளை இழந்த 44 வயதுடைய அப்துல் நூர் (Abdul Noor) கூறுகையில், “எங்களை 1974-ஆம் ஆண்டில் அரசாங்கம்தான் இங்கு குடியேற்றியது” என்றார். நிலமற்ற சுமார் 300 குடும்பங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த அகற்றுதலுக்கு எதிராகக் குவகாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட போதிலும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையின் போது 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை உட்பட 10-க்கும் மேற்பட்ட மசூதிகள் இடிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த ஜூன் மாதம், அகில இந்திய வனத் தொழிலாளர் சங்கம் (All India Union of Forest Working People) லுதுமாரி லோங்ஜாப் காப்பு வனப்பகுதியில் திட்டமிடப்பட்ட அகற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என அசாம் அரசாவத்தைக் கேட்டுக் கொண்டது.
கந்தர்பா லோங்ஜாப், பதுமோனி, ஹாதிஜூர் மற்றும் எண் 9 கெரோனி ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிரிட்டிஷ் காலத்து ‘டவுங்கியா’ (taungya) வன மேலாண்மை அமைப்பின் கீழ் குடியேற்றப்பட்டவர்கள் என்பதால், அவர்களைச் சாதாரண ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதக்கூடாது என்று அந்த அமைப்பு வாதிட்டது.
19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறையின் கீழ், சமூகத்தினர் வனத்துறையுடன் இணைந்து வணிக ரீதியாக மதிப்புமிக்க மரங்களுடன் உணவுப் பயிர்களையும் பயிரிட்டனர்.
அசாமில் பாஜக கடந்த ஒரு தசாப்த கால ஆட்சியில், மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, அரசாங்க நிலங்களிலிருந்து பெரும்பான்மையாக முஸ்லிம்கள் அடங்கிய சுமார் 19,000 குடும்பங்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
