Tuesday, November 10, 2026

இன்றும் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

2 min read · 2 reads
Image ref 118262738. Copyright Shutterstock No reproduction without permission. See www.shutterstock.com/license for more information.

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (23) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அண்மையில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தப் பிராந்தியம், நாட்டிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருகின்ற போதிலும், அதன் தாக்கம் இன்றைய தினமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று தென்கிழக்கு மற்றும் அதனை அண்மித்த கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தப் பிராந்தியம் உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் காற்றழுத்தப் பிராந்தியம் மேற்கு திசையை நோக்கி, வடமேற்குப் பக்கமாக நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இது தொடர்பாகத் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடற்பகுதிகளில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இதன் காரணமாக, குறித்த கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய கடற்பகுதிகள் பொதுவாக இயல்பான நிலையில் காணப்படும்.

எனினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும். இதன்போது கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.