காலியில் அமைந்துள்ள கராப்பிட்டிய தேசிய மருத்துவமனையில், மிகவும் சிக்கலான இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 15 இலங்கைச் சிறுவர்களுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் விசேட வேலைத்திட்டத்தை ‘டேக் ஹார்ட் மெர்சி மிஷன்’ (Take Heart Mercy Mission) அமைப்பின் வெளிநாட்டு நிபுணர் மருத்துவக் குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் உள்ளூர் மருத்துவக் குழுவினருடன் இணைந்து, கராப்பிட்டிய மருத்துவமனையின் இருதய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை பிரிவில் (Cardiothoracic Surgery Unit) இந்த அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறான மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை இலங்கையில் முன்னெடுப்பதில் பல்வேறு சவால்கள் நிலவி வந்த பின்னணியிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி இன்று (22) கராப்பிட்டிய தேசிய மருத்துவமனைக்கு விஜயம் செய்து, இந்த அறுவை சிகிச்சைகள் மற்றும் அது தொடர்பான மருத்துவ நடவடிக்கைப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது, நேரலையாக நடைபெற்றுக் கொண்டிருந்த இதய அறுவை சிகிச்சை ஒன்றைப் பார்வையிட்ட பிரதி அமைச்சர், சிறுவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கும் (PICU) சென்று ஆய்வு செய்தார்.
அங்கு, மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்குப் உட்படுத்தப்பட்ட சிறுவர்களின் குணமடையும் நிலைமை குறித்தும் வெளிநாட்டு மருத்துவக் குழுவினர் அவருக்கு விளக்கமளித்தனர்.
