மன்னிப்பு கேட்ட முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி அரச பத்திரிகை ஊடாக பொதுமன்னிப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சிங்கள மொழியிலான அரச பத்தரிகையொன்றில் இந்த பொது மன்னிப்புச் செய்தி வெளியாகியுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக அரச வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து இந்த மன்னிப்பு அறிவித்தலை பௌஷி வெளியிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 29ம் திகதி வழக்கின் தீர்ப்பு வெளியானது. இதற்கமைய 6.6 மில்லியன் ரூபாவை ஏ.எச்.எம்.பௌஷி அரசிற்கு மீள செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
அத்துடன் முறைகேடான செயற்பாட்டிற்கு பொதுமன்னிப்பு கோரும் செய்தியொன்றை சிங்களம், தமிழ் , ஆங்கில மொழி மூலமான அரச பத்திரிகைகளில் வெளியிட வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ பணிகளுக்கென நெதர்லாந்து அரசாங்கம் வழங்கிய வாகனமொன்றை தனது தனிப்பட்ட தேவைக்காக பௌஷி பயன்படுத்தியதன் ஊடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த செயற்பாடு பொது மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் ஒரு தவறு என நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில் அரச பத்திரிகைகளான சிலுமின, சன்டே ஒப்சேவர் மற்றும் தினகரன் ஆகியவற்றில் பௌஷியின் புகைப்படத்துடன் கூடியதான மன்னிப்பு அறிவித்தல் வெளியிடப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.