Wednesday, October 28, 2026

மக்காவில் ஒரே இமாமின் கீழ் தொழுகை நிறைவேற்றப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு!

1 min read · 9 reads
மக்கா புனித அல்-ஹரம் (Grand Mosque) பள்ளியில் ஒரே இமாமின் கீழ் அனைத்து முஃமின்களும் ஒன்றாக இணைந்து தொழுகையை நிறைவேற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடைமுறை 100 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது.
பல நூற்றாண்டுகளாக, புனித ஹரம் எல்லையில் நான்கு வெவ்வேறு மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்களுக்காக நான்கு தனித்தனி தொழுகை இடங்கள் இருந்தன.
ஒவ்வொரு மார்க்கச் சிந்தனைப் பிரிவினரும் (மத்ஹப்) தங்களுக்கென தனித்தனி இமாம்களைக் கொண்டு, ஒருவருக்குப் பின் ஒருவராகத் தொழுது வந்தனர்.
பொதுவாக ஷாஃபி மத்ஹப் பிரிவினர் முதலில் தொழுகையை நிறைவேற்றுவர், அவர்களைத் தொடர்ந்து ஏனைய பிரிவினர் தொழுவர்.
இதனால் ஒரே நேரத்து தொழுகை ஒரு நாளைக்கு பல முறை தனித்தனியாக நடத்தப்படும் நிலை இருந்தது.
அரசர் அப்துல் அஜீஸின் வரலாற்று முடிவு: 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று, மன்னர் அப்துல் அஜீஸ் (King Abdulaziz) இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
ஒரே இமாமின் கீழ் ஒற்றுமை: இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்து ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், அனைத்து முஸ்லிம்களையும் ஒரே இமாமின் பின்னால் ஒன்று சேர்க்கும் முடிவு எடுக்கப்பட்டது.
நபிகளார் காட்டிய வழி: அன்று முதல், ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் ஒரே ஒரு ஜமாஅத் (கூட்டுத் தொழுகை) மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. தனித்தனி பிரிவுகளோ அல்லது மீண்டும் மீண்டும் தொழுகை நடத்தும் முறையோ புனித ஹரமில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. இது பெருமானார் நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் தொழுத முறையோடு மிகச்சரியாகப் பொருந்திப்போகிறது.
கடந்த 100 ஆண்டுகளாக எந்தவொரு மாற்றமும் இன்றித் தொடர்ந்து வரும் இந்த அமைப்பின் மூலம், இன்றுவரை உலகெங்கிலும் இருந்து வரும் லட்சக்கணக்கான ஹாஜிகளும் யாத்ரீகர்களும் ஒரே இமாமின் பின்னால் ஒரே சமூகமாக இணைந்து தொழுது வருகின்றனர்.