Monday, October 26, 2026

பிரேசிலில் மீண்டும் இடதுசாரி ஆட்சி; 4வது முறை ஜனாதிபதியாகும் லூலா டாசில்வா; டிரம்ப் ஆதரவாளர் தோல்வி!

2 min read · 1 reads

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மீண்டும் வெற்றி பெற்றார்.

லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார நாடான பிரேசிலில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி தலைவரும் தற்போதைய அதிபருமான லூலா டா சில்வா, முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் மகனான பிளாவியோ போல்சனாரோ இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தல் பிரசாரத்தில் பிளாவியோ போல்சனாரோ டிரம்ப் நிர்வாகத்துடன் சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

மறுபுறம் பிரேசிலின் ஏற்றுமதிகள் மீதான வரிகள் உட்பட பிரேசில் மீதான அமெரிக்காவின் கொள்கைகளை லூலா விமர்சித்திருந்தார்.

முதற்கட்ட வாக்குபதிவு முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நேற்று (25) அங்கு இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையில் 78 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், லூலா 51.21 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தார். அதே நேரத்தில் போல்சனாரோ 48.79 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுவிட்ட நிலையில் அதிபர் லூயிஸ் லூலா டா சில்வா தனது போட்டியாளரான பிளாவியோ போல்சனாரோவை தோற்கடித்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடதுசாரியான லூயிஸ் லூலா டா சில்வா அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் ஆவார். இந்நிலையில் அவரின் வெற்றி மேற்குலகில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரம் இடதுசாரி தலைமையின் கீழ் நீடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த முடிவு, லத்தீன் அமெரிக்காவில் உள்ள டிரம்பின் கூட்டாளிகளுக்கு ஒரு பெரும் பின்னடைவாகும்.

பிரேசில் மீது ஆதிக்கம் செலுத்தும் கனவில் இருந்த டிரம்ப்புக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே வரும் நாட்களில் பிரேசில் மீது அவர் கூடுதல் வரிகளை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.