அமெரிக்க செனட் வேட்பாளர் அப்துல் அல்-சயீத் தனக்கு வைக்கப்பட்ட ‘பொறியை’ சாதகமாக மாற்றிய தருணம்.

Date:

எதிர்பாராத ஒரு திருப்பமாக, மிச்சிகன் மாநிலத்தில் அமெரிக்க செனட் சபைக்கான(Senate) ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அப்துல் ரஹ்மான் அல்-சையதை ‘பொறியில்’ சிக்க வைக்க குடியரசுக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, அவரது தேர்தல் பிரச்சாரத்தின் மிகவும் சக்திவாய்ந்த தருணங்களில் ஒன்றாக மாறியுள்ளதாக The New Republic இதழ் வெளியிட்ட அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க இதழின் தகவலின்படி, சனிக்கிழமையன்று மிச்சிகன் மாநிலத்தின் கரோ (Caro) நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வின் போது, “டாமி” என்ற பெயருடைய மிச்சிகனைச் சேர்ந்த வாக்காளர் போலத் தோன்றிய ஒரு இளைஞர் எழுந்து, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிலிருந்து (Muslim Brotherhood) விலகி நிற்பதாக பகிரங்கமாக அறிவிக்கக் கோரி அல்-சையதிடம் கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்வியின் பின்னணியிலிருந்த இனவெறி நோக்கத்தை அல்-சையத் உடனடியாக உணர்ந்து, அதற்குப் பணிய மறுத்ததுடன், குறிப்பாகத் தன்னிடம் மட்டுமே ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என “டாமி”யிடம் திருப்பி வினவத் தொடங்கினார்.

“டாமி” மழுப்பலாகப் பதிலளித்து, அல்-சையத் அந்த அமைப்பைப் பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை என்று மீண்டும் வலியுறுத்தியதாக அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்குப் பதிலளித்த அல்-சையத், “டாமி” அமெரிக்க அரசியலமைப்பை விடத் தனக்கு “உயர்ந்த வேறு ஏதோ விசுவாசம்” இருப்பதாக ஊகிப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து அல்-சையத், “நமது நாட்டின் சட்டங்களில் ஏதேனும் மதக் கோட்பாடுகளை புகுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் நிராகரிப்பீரா?” என “டாமி”-யிடம் கேட்டார். அதற்கு “டாமி” ‘இல்லை’ எனப் பதிலளித்த போது, அமெரிக்க அரசியலமைப்பைப் புரிந்து கொள்ளத் தவறியதற்காக அல்-சையத் அவரைக் கடிந்து கொண்டார்.

அல்-சையதின் பிரச்சாரக் குழு இந்த உரையாடலை உடனடியாக ஒரு வீடியோ பதிவாக மாற்றி வெளியிட, அது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி, அந்த வீடியோ ‘X’ தளத்தில் மட்டும் 13 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளதாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

உண்மையில் அந்த “டாமி”, மிசோரி மாநிலத்தின் குடியரசுக் கட்சி செனட்டர் ஜோஷ் ஹோலியின் (Josh Hawley) செயல்பாட்டு இயக்குநரான தாமஸ் திபெல் (Thomas Tebell) என்பதும், லூசியானா மாநிலத்தின் முன்னாள் குடியரசுக் கட்சி ஆளுநர் பாபி ஜிண்டாலிடம் (Bobby Jindal) பணியாற்றிய திமி திபெலின் மகன் என்பதும் அந்த இதழின் மூலம் தெரியவந்துள்ளது.

அப்துல் ரஹ்மான் அல்-சையதைச் சங்கடப்படுத்தும் நோக்கில் குடியரசுக் கட்சியின் செல்வாக்கு மிக்கவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இந்த கேள்வி-பதில் அமர்வு முழுவதும் என The New Republic தெரிவித்துள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில், ஃபிளிண்ட் (Flint) நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வில் அல்-சையதுக்கு எதிராகக் கூச்சலிடவும், தூண்டிவிடும் வகையில் கேள்விகளைக் கேட்கவும் “College Republicans” அமைப்பின் உறுப்பினர்களுக்கு “America Next” என்ற பழமைவாத அரசியல் நடவடிக்கைக் குழு $200 வழங்கியதாக “The Michigan Daily” செய்தி வெளியிட்டிருந்ததை அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், திபெல் குடும்பத்தினர் இதுபோன்ற மற்றொரு பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. தாமஸின் தந்தைக்குச் சொந்தமான “Breakthrough LLC” என்ற அமைப்பு, அப்துல் ரஹ்மான் அல்-சையதுக்கு எதிராகச் சமூக வலைதளச் செல்வாக்காளர்களைப் பயன்படுத்திப் பிரச்சாரம் செய்வதற்காக, ஜிண்டாலுடன் தொடர்புடைய “இருண்ட பணம்” (Dark Money) அமைப்பிடம் இருந்து $250,000 பெற்றுள்ளது.

இந்த முயற்சி அதைச் செய்தவர்களுக்கே எதிராக முடிந்துவிட்டதாக அந்த அமெரிக்க இதழின் அறிக்கை முடிவடைகிறது. அப்துல் ரஹ்மான் அல்-சையத் இந்த மோதலைத் தனது மேலவைத் தேர்தலுக்கான நேர்மறையான வீடியோவாக மாற்றி, மதப் பாகுபாட்டு முயற்சிகளுக்கு எதிராக அரசியலமைப்பைப் பாதுகாக்கும் ஒரு தலைவராகத் தனது பிம்பத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கொழும்பில் காசநோய் பரவ அதிக மக்கள் தொகையே முக்கிய காரணம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்!

கொழும்பு நகரில் பல வருடங்களாகக் காசநோய் பரவுவதற்கு அங்குள்ள அதிக மக்கள்...

ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு ஐக்கிய அரபு அமீரகம் முன்மொழிந்துள்ள வேட்பாளரான லானா நுஸைபே யார்?

ஐநா சபையின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE)...

சிறையில் உள்ள நாமலுக்கு உணர்வுபூர்வமாக கடிதம் எழுதிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிற்கு, முன்னாள்...

நிதி நெருக்கடி: காஸாவில் அரை மில்லியன் பாலஸ்தீனர்களுக்கான உணவு உதவிகளை நிறுத்தியது உலக உணவுத் திட்டம்

கடுமையான நிதிப் பற்றாக்குறை காரணமாக ஐநா சபையின் உலக உணவுத் திட்டம்...