கென்யாவில் 190 குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவரைக் பட்டினி போட்டுப் படுகொலை செய்த வழக்கில், ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்’ (Good News International Church) அமைப்பின் தலைவரான மத போதகர் போல் மெக்கென்சி (Paul Mackenzie) மற்றும் அவரது ஆதரவாளர்கள் 29 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சம்பவத்தின் பின்னணி என்ன?
கென்யாவின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஷாகாஹோலா (Shakahola) வனப்பகுதியில் இந்த கொடூரக் குற்றச்செயல் அரங்கேறியுள்ளது.
“இயேசுவை நேரில் சந்திக்க வேண்டும் என்றால், குழந்தைகள் உட்பட அனைவரும் பட்டினியிருந்து உயிரை விட வேண்டும்” எனப் போல் மெக்கென்சி தனது ஆதரவாளர்களுக்குப் போதனை செய்துள்ளார்.
முறையான கல்வியும், நவீன மருத்துவ சிகிச்சைகளும் “சாத்தானின் வழிமுறைகள்” எனக் கூறி, ஆதரவாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை அவர் தடை செய்துள்ளார்.
400-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுப்பு
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தியப் பெருங்கடலை ஒட்டிய மாலிண்டி (Malindi) நகருக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மனித எச்சங்கள் முதன்முதலில் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் மற்றும் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் போது, வனப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்ட சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இதில் பாதியளவிலான சடலங்கள் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத் தீர்ப்பு
நீண்ட விசாரணைக்குப் பிறகு, மாம்பாசா உயர் நீதிமன்றம், 190 குழந்தைகள் உட்பட 191 பேரின் கொடூரக் கொலைக்கு போல் மெக்கென்சியும் அவரது 29 உதவியாளர்களுமே காரணம் எனத் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
(Source: ராய்ட்டர்ஸ், சி.என்.என்)
