ஹோமாகம பொலிஸ் காவலில் இருந்த நபர் உயிரிழப்பு: பொலிஸார் தாக்கியதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு
போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய நபர் ஒருவர், பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலினாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உறவினர்களின் கூற்றுப்படி, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு ஹோமாகமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவரைப் பார்ப்பதற்காக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோதே, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், அவரால் சுயமாக நடக்க முடியவில்லை என்றும், பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேர்ந்து அவரைச் சுமந்து வந்ததாகவும் அவர்கள் மேலும் கூறினர்.
மீண்டும் பொலிஸ் கூட்டிற்குள் அடைக்கப்பட்டபோது, அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும், குருதி வடிந்துகொண்டிருந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடும்பத்தினரின் தொடர் கோரிக்கையை அடுத்து, சந்தேகநபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட்டு தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில்; பொலிஸ் நடவடிக்கையின் போதே சந்தேகநபர் ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஹோமாகமை உதவி பொலிஸ் அத்தியாட்சகர் (ASP) தலைமையில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.