Tuesday, October 27, 2026

4வது ஆண்டுக்குள் நுழையும் இஸ்ரேலின் இனப் படுகொலைகள் ; தொடர்ந்து அலட்சியமாக இருக்கும் உலக முஸ்லிம்கள்

8 min read · 12 reads

-லத்தீப் பாரூக்

காசா என்பது மத்தியதரைக் கடல் பிரதேசத்தில், சுமார் 365 சதுர மைல் பரப்பளவில் உள்ள ஒரு சிறிய கடற்கரை சார்ந்த நிலப்பரப்பாகும்.

எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த பகுதியில் சுமார் 2.4 மில்லியன் பலஸ்தீன மக்கள் வசிக்கின்றனர்.

இது உலகின் மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். இங்கு வசிப்பவர்கள் பலஸ்தீன அகதிகள் என அழைக்கப்படுகின்றனர்.

ஆனால் இப்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாட்டின் பூர்வீக குடிமக்கள் இவர்கள் தான்.

இன்னமும் இவர்களுக்கு சொந்தமான வீடுகளும், காணிகளும், இதர சொத்துக்களும் இஸ்ரேலுக்குள் இருக்கின்றன.

இந்த மக்கள் மெனாச்செம் பெகின், யிட்ஷாக் ஷமீர், ஏரியல் ஷரோன் ஆகியோர் உட்பட மற்றும் பலர் தலைமையிலான யூத பயங்கரவாதக் குழுக்களால் தமது சொந்த இடங்களில் இருந்து பயங்கரவா​தத்தை பிரயோகித்து விரட்டி அடிக்கப்பட்டனர்.

மேலும் 1948 இல் பலஸ்தீன மக்களின் தாயக பூமிக்குள், யுத்தவெறி கொண்ட ஒரு யூத குடியேற்ற பயங்கரவாத அரசை நிறுவ, பிரிட்டிஷ் அரசு அப்போது தனக்கிருந்த அதிகாரத்தின் உதவியுடன் பலஸ்தீன மக்களின் பூர்வீக நிலங்கைள ஆக்கிரமித்தது.

1967 ஜூன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போரின் போது, காசா இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் அங்குள்ள மக்கள் தினசரி கொலைகள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் சித்திரவதைகள் அடங்கிய இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனத்துக்கு ஆளாகி வருகின்றார்கள்.இன்றும் இது தொடருகின்றது.

காசாவில் உள்ள பலஸ்தீன சமூகம் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மாணவர்கள் பொறியியலாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், மற்றும் இதர பிரிவினர் என ஒரு கலப்பு சமூகமாகவே இருந்தனர்.

பல தசாப்தங்களாக நீடித்த இஸ்ரேலிய ஒடுக்குமுறை மற்றும் இந்த மக்கள் தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டமை என்பன, கோபம் கொண்ட ஒரு இளைஞர்கள் பிரிவை உருவாக்கியது, அவர்களில் பெரும்பாலானவர்க்ள் தாக்குதலுக்கு உள்ளாகும் ஏனைய எந்த மக்களையும் போலவே ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடினர்.

கடுமையான பலஸ்தீன எதிர்ப்பை, எதிர்கொள்ள முடியாமல், 2005 ஆம் ஆண்டில் 38 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்குப் பிறகு, இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெற்று, வெளி உலகத்துடனான காசாவின் ஒரே தொடர்பு வழியான ரஃபா எல்லையின் கட்டுப்பாட்டை எகிப்திடம் ஒப்படைத்தது.

அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்ட பலஸ்தீனப் படைகளும் அங்கு நிறுத்தப்பட்டன.

பல தசாப்தங்களாக முறையான இஸ்ரேலிய ஒடுக்குமுறை மற்றும் தொடர்ச்சியான எல்லைக் கட்டுப்பாடுகள் என்பன காசா மக்களை தீவிரமான வறுமைக்குள் தள்ளியுள்ளது.

இங்கு வாழும் மக்கள் தொகையில் சுமார் 80%மானவர்கள், தவிர்க்க முடியாத வகையில், அன்றாட வாழ்வாதாரத்துக்காக பிற இடங்களில் இருந்து வரும் உணவு உதவிகளை நம்பியுள்ளனர்.

அத்தகைய உதவிகள் கிடைக்கா விட்டால், அவர்கள் சில நாட்களில் இறந்து விடுவார்கள், என்ற பரிதாபகரமான சூழ்நிலையில் இந்த ஏழை மக்கள் சிக்கி உள்ளனர்.

2006 ஜனவரியில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற, ஊழல் மோசடிகள் எதுவுமற்ற ஒரு ஜனநாயக ரீதியான தேர்தலில், பலஸ்தீன மக்கள் தமது உரிமைகள் மற்றும் கண்ணியத்தை நிலைநாட்ட, தமது பேரபிமானத்தை வென்ற, அமைதியை நம்பும் ஹமாஸ் இயக்கத்தை, தமது ஆட்சியாளர்களாக பெரும் பெரும்பான்மை பலத்துடன் தெரிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, மக்கள் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, ஹமாஸ் இயக்கம் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்து, ஒரு அரசியல் ஒப்பந்தத்துக்குள் தன்னை தக்கவைத்துக் கொள்ள முன்வந்தது.

ஆனால் யுத்த வெறி கொண்ட இஸ்ரேல், பலஸ்தீன பொது மக்களை தொடர்ந்து படுகொலை செய்த போதிலும், பதிலடியாக பயனற்ற ராக்கெட்டுகளை வீச ஹமாஸை தூண்டிய போதிலும், அவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு, ஹமாஸ் கிட்டத்தட்ட ஒரு வருடம் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்தது.

மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன அதிகார சபை தேர்தல் முடிவுகளை நிராகரித்தது.

காரணம் இஸ்ரேல், தனது தீய வடிவமைப்புகளுக்கு ஏற்றவாறு செயற்படும், பலஸ்தீன அதிகார சபையின் கைக் கூலிகள் மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவுடன் செயற்படும் பலஸ்தீன அதிகார சபை என்பன காசாவின் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என விரும்பியது.

இஸ்ரேல்-அமெரிக்க நிகழ்ச்சி நிரலுடன் நன்கு பொருந்திப் போகக் கூடியதாக காசாவின் அதிகார பீடம் அமைய வேண்டும் என்பதே அதன் திட்டமாகும்..

எனவே ஹமாஸ் இயக்கத்தையும் காசாவில் துளிர் விடத் தொடங்கிய ஜனநாயகத்தையும் நசுக்கும் வகையில், பலஸ்தீன மக்களின் விருப்பங்களை நிராகரித்து, இஸ்ரேலும், மேற்குலகும் மற்றும் மத்திய கிழக்கில் அவர்களின் ஒத்துழைப்பாளர்களும், மஹ்மூத் அப்பாஸையும் அவரது தலைமையிலான பலஸ்தீன அதிகார சபையையும் ஊக்குவிக்கத் தொடங்கினர்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் எகிப்து ஊடாக, பணம், ஆயுதங்கள், ஆயுதப் பயிற்சி மற்றும் அரசியல் ஆதரவு என்பனவற்றை பலஸ்தீன அதிகார சபைக்கு தாராளமாக வழங்கின. இந்த நடவடிக்கைக்கு சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் என்பன தீவிர ஆதரவை வழங்கின.

இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேல், ஏற்கெனவே சமாதான ஒப்பந்தம் என்ற பெயரில் பலஸ்தீனத்துடன் செய்து கொண்ட “ஒஸ்லோ ஒப்பந்தம்” மூலம் இணக்கம் காணப்பட்ட எல்லா விதிகளையும் மீறி, காசாவுக்கான சகல நன்கொடைகளையும் நிறுத்தி, காசாவில் பலஸ்தீனர்கள் பட்டினியால் வாட வழியமைத்தது.

இதன் மூலம் காசா ஸ்தம்பித நிலைக்கு வந்தது. மேற்குலக அரசியல் தலைவர்களும் கீழ்ப்பணிவோடு இதைப் பின்பற்றினர்.

எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் பிற நாடுகளில் உள்ள அரபுலக அடிமை ஆட்சியாளர்களும் பலஸ்தீனர்களுக்கு, இஸ்ரேல் ஏற்படுத்தும் துயரங்களை நன்கு அறிந்த நிலையிலேயே இந்த சதித் திட்டத்தில் இணைந்து கொண்டனர்.

இதன் விளைவாக, பலஸ்தீன மக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் உடலையும் ஆன்மாவையும் ஒன்றாக வைத்திருக்க ஹமாஸுக்கும் இந்த பணம் கட்டாயமாகத் தேவைப்பட்டது.

இந்த நிலையில் தான் 2006 ஜூன் இல் வீதிகள், பாலங்கள், மருத்துவ மனைகள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள் என்பன உட்பட நீர் மற்றும் மின்சார விநியோக நிலையங்களையும் இஸ்ரேல், குண்டுவீசி அழித்ததுடன், 46 குழந்தைகள் உட்பட 275 பலஸ்தீனர்களைக் கொன்று குவித்தது.

பொருளாதார முற்றுகை மற்றும் எல்லை மூடல் ஆகியவை காசாவை ஒரு மெய்நிகர் திறந்த சிறைச்சாலையாக மாற்றியது. மேலும் பலஸ்தீனர்கள் வான், கடல் மற்றும் நிலப் பாதைகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டனர்.

இஸ்ரேலியர்களால் தடுக்க முடியாத, காற்றைத் தவிர, மற்ற அனைத்தையும் பலஸ்தீன மக்கள் இழந்தனர்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காசா பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டதை “இப்போது பூமியில் நிலவும் மிகப்பெரிய மனித உரிமைக் குற்றங்களில் ஒன்று” என்று வர்ணித்தார்.

கிட்டத்தட்ட மயான பூமியாக மாறியிருக்கும் இன்றைய காசா
மூச்சுத்திணறலில் சிக்கிக்கொண்ட பலஸ்தீன மக்களின் கூக்குரல்கள் இப்பகுதியில் அகோரமாக ஒலித்தும் கூட, அபரிமிதமான செல்வத்தில் மிதந்து கொண்டிருந்த சியோனிச சார்பு அரபு கொடுங்கோலர்களின் காதுகளை எட்டவில்லை.

அந்தக் கொடியவர்களின் இதயங்களை உருகவைக்கவும் அவற்றால் முடியவில்லை.
இதன் விளைவு தான், இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் பலஸ்தீன மக்களின் துன்பங்களும், துயரங்களும் வறுமையும்.

இவ்வாறு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட பலஸ்தீன மக்கள் மீது தான், அமெரிக்கா-இங்கிலாந்து-ஐரோப்பிய நாடுகள் வழங்கிய அண்மைக்கால அதிநவீன பதுங்கு குழி ஏவுகணைகள், எப்.16 குண்டுவீச்சு விமானங்கள், தடைசெய்யப்பட்ட வெள்ளை பொஸ்பரஸ் இரசாயன குண்டுகள் மற்றும் பிற அழிவுகரமான ஆயுதங்ளை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.

ஏற்கனவே உலகின் மிகப் பெரிய ஒரு திறந்த சிறைச்சாலையாக இருந்த காசாவை, இப்போது கிட்டத்தட்ட ஒரு கசாப்புக் கடைக்கு நிகரான இடமாக இஸ்ரேல் மாற்றி விட்டது. இங்கு இஸ்ரேல், தனது எல்லா விதமான கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கைகளுடன், தனது இராணுவ வலிமையை கட்டவிழ்த்தும் விட்டுள்ளது.

இஸ்ரேல் அதன் அண்மைய படுகொலைகளைத் தொடங்கி 22 நாட்களில், 2008 டிசம்பர் 27 முதல் 2009 ஜனவரி 18, வரையான காலப் பகுதியில், 1,334 பலஸ்தீன மக்களைக் கொன்றது.

அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள். 5,450 பேர் காயமடைந்தனர். 100,000 பேர் இடம்பெயர்ந்தனர். 50,000 பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். 4,100 குடியிருப்பு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.

17,000 கட்டிடங்கள் நாசமாக்கப்பட்டன. (இது காசாவில் உள்ள மொத்த கட்டிடங்களில் 14 சதவீதமாகும்) 29 கல்வி நிறுவனங்கள் அழிக்கப்பட்டன. 92 பள்ளி வாசல்கள், 1500 கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிக வசதிகள், 20 ஆம்புலன்ஸ்கள், 35-60% வரையான விவசாய நிலங்கள் என்பனவும் அழிக்கப்பட்டன.

மொத்தமாக இழைக்கப்பட்ட சேதங்கள் 1.9 பில்லியன் டொலர் என அப்போது மதிப்பிடப்பட்டது.

இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான இஸ்ரேலிய தாக்குதல்கள் அவ்வப்போது இடம்பெற்று வந்துள்ளன. 2023 அக்டோபர் 7 முதல் காசாவில் மிக நன்றாகத் திட்டமிடப்பட்டு அவை மேலும் விரிவான முறையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் இனப் படுகொலைகள் வரை இது தொடருகின்றது.
இந்த இனப் படுகொலைகள் மிக நன்றாகத் திட்டமிடப்பட்டு முழுமையான அமெரிக்க ஆதரவுடன் அமுல் செய்யப்படுகின்றது, என்பது தற்போது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு இனப் படுகொலை, என்பதில் இப்போது எந்த சந்தேகமும் இல்லை.

இஸ்லாம் மார்க்கத்தையும், முஸ்லீம்களையும் மற்றும் பலஸ்தீன மக்களையும், கைவிட்ட அரபுலக சர்வாதிகாரிகள், தங்களின் அமெரிக்க- இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் இஸ்ரேலிய எஜமானர்களைக் குஷிப்படுத்த இந்த ஈனச் செயல்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்து வருகின்றனர்..

கட்டுரையாளர் டி. ஆர். ரெசா பெஹ்னம் என்பவர் சுட்டிக்காட்டி உள்ளபடி, “இத்தகைய ஒரு கொடூரமான தருணத்தை உலகம் நேரடியாகக் கண்டது.

அதைத் தடுக்கக் கூடிய எல்லா விதமான சட்ட, அரசியல் மற்றும் நிறுவன வழிமுறைகளும் உலகுக்கு முன்னாள் இருந்தன. ஆனால் உலகம் எதுவும் செய்யவில்லை.

தற்போது மூன்று ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் இந்த காட்டுமிராண்டித்தனம் கொஞ்சம் கூட மறைக்கப்படவில்லை என்பதுதான், இன்று காசாவின் உண்மையான மிகப்பெரிய பயங்கர நிலை. இது உலகளாவிய பார்வையாளர்களுக்கு அதிஉயர் தெளிவு நிலையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

உலகம் இதைத் தெளிவாகப் பார்த்தது, இது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆவணப்படுத்தப்பட்டது. மேலும் அது தொடரவும் அனுமதிக்கப்பட்டது என்பது தான் கவலைக்குரிய விடயமாகும்.

பெரிய சர்வதேச சக்திகள் இஸ்ரேலையும் அதன் காலனித்துவ சக்திகளையும் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் தங்கள் வன்முறையை அதிகரிக்க அனுமதித்தன.

சட்ட ரீதியான தண்டனையில் இருந்து விடுபட்டு நிற்கும் உரிமையுடன் கூடிய, மூன்று ஆண்டு கால இனப் படுகொலைகளில், மனித உயிர்களின் மதிப்பு ஒரு மலிவான அளவுகோலில் அளவிடப் படுகின்றது என்பதை இந்த நிலை வெளிப்படுத்துகின்றது.

அது இனம், புவியியல் மற்றும் அரசியல் பயன்பாட்டின் அடிப்படையில் அளவிடப்படுகின்றது என்பதும் தெளிவாகின்றது.

இந்த விடயத்தில் மேற்கத்திய சக்திகளின் மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

மனித உரிமைகள், விதிமுறைகளின் அடிப்படையிலான ஒழுங்கு, சட்டத்தின் ஆட்சி மற்றும் சர்வதேச நீதித்துறை குறித்து உலகிற்கு சொற்பொழிவுகளை வழங்குவதில், ஒருபோதும் சோர்வடையாத பல மேற்குலக அரசாங்கங்கள் நியாயமற்றதை நியாயப்படுத்த தார்மீக ரீதியான குத்துக் கரணங்களில் ஈடுபட்டன.

பல்கலைக்கழகங்கள், பள்ளிக் கூடங்கள், பள்ளிவாசல்கள், மருத்துவ மனைகள், சந்தைகள், புத்தகக் கடைகள், பேக்கரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் என எல்லாவற்றையும் இடிபாடுகளாகத் தகர்க்கும் வகையில் இடைவிடாது செயற்படத்தக்க வெடி மருந்துகளை, இஸ்ரேலுக்கு வழங்குவதன் மூலம் உலகத் தலைவர்கள் தமது விசுவாசம் எனும் வெற்று காசோலைகளுடன் இஸ்ரேலை நோக்கி ஒன்றிணைவதை நாங்கள் பார்த்தோம்.

இந்தத் தலைவர்கள் பகிரங்கமாக மக்களை நோக்கி, ஆதரவாக தங்கள் கைகளை அசைக்கும் அதே வேளையில், தனிப்பட்ட முறையில், இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதிகளுக்கும் ஒப்புதல் அளித்தனர்.

இதே தலைவர்கள் காசாவில் இடிபாடுகளில் இருந்து வெளியேறத் துடித்துக் கொண்டிருந்த மக்களுக்கு மிகவும் எடை குறைந்த சாக்குகளில் மாவை வான்வழியாக வீசுவதற்கும் அங்கீகாரம் அளித்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்த மௌனம் இப்போது காது கேளாத நிலைக்கு வந்துள்ளது. இனப்படுகொலை குறித்து எந்த சந்தேகமும் இப்போது இல்லை.

அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச சட்டங்களுக்கு பற்றாக்குறையும் இல்லை. ஆனால் இதில் முற்றிலும் தோற்றுப் போனவர்கள், இந்த விடயம் பற்றி வாய் கிழிய பேசும் மேற்குலக நிறுவனங்களின் வாயில் காப்பாளர்கள் தான். காரணம் இந்த விடயத்தில் செயற்படும் தைரியம் அவர்களுக்கு இல்லை.

இனப் படுகொலைகளுக்கு தண்டணை வழங்கப்படாமல் இருக்க அனுமதிப்பது, உலகளாவிய பாதுகாப்புக்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கி உள்ளது.

சர்வதேச சட்டங்களும் நீதியும் காசாவின் இடிபாடுகளுக்குள் புதைக்கப்பட்டால், உலக சமூகம் இறுதியில் அதன் சொந்த கல்லறையை தானே தோண்ட வேண்டிய நிலை ஏற்படும்”.

இது வரை 21, 000 குழந்தைகள் உட்பட 74,370க்கும் மேற்பட்ட பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ன்னும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் அல்லது இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனர். 175, 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளாக மாறவும் மற்றும் நீண்டகால குறைபாடுகளுக்கு ஆளாகவும் வழிவகுக்கின்றது.

காசாவின் 82% கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் 80-90% மான பள்ளிவாசல்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

அல்லது செயல் இழந’துள்ளன. பெரும்பாலான நீர் சுத்திகரிப்பு வசதிகள், பொது சுகாதார அமைப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் என்பனவும் செயற்பட முடியாத நிலையில் உள்ளன.

இது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மோசமான நோய் பரவல்களுக்கும் வழியமைத்துள்ளது.