Tuesday, October 27, 2026

இலங்கை – துருக்கி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை.

2 min read · 2 reads

துருக்கியின் பிரதி வெளிவிவகார அமைச்சருடன் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்கள், தமது உத்தியோகபூர்வ துருக்கி விஜயத்தின்போது, இன்று (27) அங்காராவில் துருக்கிக் குடியரசின் பிரதி வெளிவிவகார அமைச்சரும் தூதுவருமான மேன்மைதங்கிய ஏ. பெரிஸ் எகின்சி (H.E. Ambassador A. Berris Ekinci) அவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துதல், பொருளாதார உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விவசாயம், சுற்றுலாத்துறை, கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இப்பேச்சுவார்த்தைகளின்போது கவனம் செலுத்தப்பட்டது.

இருதரப்பு பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துதல், குறிப்பாக இலங்கைத் தேயிலை (Ceylon Tea) உள்ளிட்ட இலங்கை உற்பத்திப் பொருட்களுக்குத் துருக்கிச் சந்தையில் சந்தை அணுகல் வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் துருக்கி அரசாங்கத்துடனான பங்காளித்துவத்தை வலுப்படுத்துதல் தொடர்பாக இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

விவசாய ஒத்துழைப்பும் பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடத்தைப் பெற்றது. குறிப்பாக, விவசாய ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. நவீன விவசாயத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம், திறன் மேம்பாடு, விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

விமான சேவைகள் ஒப்பந்தத்தின் கீழ் விமானப் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்துதல், பயிற்சிபெற்ற மற்றும் திறன்வாய்ந்த இலங்கையர்களுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அடையாளம் காணுதல், சுற்றுலாத்துறை, கல்வி, கலாசாரப் பரிமாற்றங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான பங்காளித்துவங்கள் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்துதல் ஆகிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

காலநிலை மாற்றம், நிலைபேறான அபிவிருத்தி, அனர்த்தங்களுக்கான தயார்நிலை மற்றும் அவற்றை எதிர்கொண்டு மீண்டெழும் ஆற்றலை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். வளர்ந்துவரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இராஜதந்திர மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்ற மட்டத்திலான தொடர்புகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய மற்றும் பல்தரப்பு மன்றங்களில் பங்கேற்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து மேம்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

துருக்கியுடன் இலங்கை பேணிவரும் நீண்டகால நட்புறவு மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்கள், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், இப்பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளை இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றுவதற்கும் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதுடன், பொருளாதார ஒத்துழைப்பு, நிறுவனங்களுக்கிடையிலான தொடர்புகள் மற்றும் மக்கள் தொடர்புகளை உள்ளடக்கிய எதிர்கால நோக்குடைய பங்காளித்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான முக்கியமான வாய்ப்பாக அமைந்தது.

துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் திருமதி நிலூகா கதிருகமுவ மற்றும் அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் திருமதி நிலூஷா தில்மினி ஆகியோரும் இப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர்.