Monday, October 26, 2026

ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழப்பு: பொலிஸார் மீது கொடூரத் தாக்குதல் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் வசந்த முதலிகே!

2 min read · 6 reads
ஹோமாகம பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளதாக தொழிற்சங்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஆர்வலர் வசந்த முதலிகே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள வசந்த முதலிகே, குறித்த இளைஞர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாகவும், உறவினர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும் அவருக்கு மருத்துவ உதவி வழங்க பொலிஸார் தாமதம் காட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
விசாரணையின் பின்னர், அந்த இளைஞரால் சுயமாக நடக்க முடியாமல் போனதால் பொலிஸார் அவரை மீண்டும் பொலிஸ் கூட்டிற்குள் சுமந்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும், வாயிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்ததாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.
குடும்பத்தினரின் தொடர் கோரிக்கையை அடுத்தே பொலிஸார் அவரை ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும், ஆனால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதே அவர் உயிரிழந்திருந்ததாகவும் குடும்பத்தினர் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன், இஷார ஹர்ஷ குமாரவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞரின் நிலைமை குறித்தும் வசந்த முதலிகே கவலை வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்த இரண்டாவது இளைஞர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், இரண்டாவது நபர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் மறுத்துள்ளார். இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், பொலிஸ் காவலில் எடுக்கப்படும் எவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அத்துமீறல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த வூட்லர், பதவி தராதரத்தைப் பொருட்படுத்தாமல் சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கண்டறியப்படும் எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதேவேளை, பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகநபருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து ஹோமாகமை உதவி பொலிஸ் அத்தியாட்சகரின் மேற்பார்வையில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்பிற்கான காரணம் மற்றும் பின்னணியைக் கண்டறிவதற்காக நீதிவான் விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் இன்று (அக்டோபர் 26) நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என உறவினர்களும் அப்பகுதி மக்களும் தீவிரமாகக் கோரி வருகின்றனர்.