Friday, October 30, 2026

1990ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்: தீர்க்கப்படாத மீள்குடியேற்றப் பிரச்சினைகளும் தொடரும் வாழ்வாதாரப் போராட்டங்களும்

10 min read · 15 reads

-P.M.முஜீபுர் றஹ்மான் (மூத்த ஊடகவியலாளர்)

குறிப்பு- வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் அக்டோபர் மாதத்தில் [30] நிறைவடைகிறது, அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.

ஒரு மனிதனுக்கு வீடு என்பது வெறும் நான்கு சுவர்களைக் கொண்ட கட்டிடம் மட்டுமல்ல. அது அவனது குடும்பத்தின் நினைவுகள், வாழ்வாதாரம், பாதுகாப்பு, அடையாளம் மற்றும் எதிர்காலம் ஆகிய அனைத்துடனும் பின்னிப் பிணைந்தது.

அத்தகைய வீடுகளையும், பூர்வீகக் காணிகளையும், தாம் வாழ்ந்து வந்த மண்ணையும் ஒரே நாளில் இழந்து, அகதிகளாக வேறொரு பிரதேசத்தில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்தத் துயரத்தை வார்த்தைகளால் முழுமையாக விவரிப்பது கடினம்.

இலங்கையின் வடமாகாண முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு எதிர்கொண்ட துயரமும் இதுவே. தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதமுனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள், தமது பூர்வீக வாழ்விடங்கள், வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து, புத்தளம் உள்ளிட்ட பிரதேசங்களில் அகதிகளாகத் தஞ்சமடைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் ஆரம்பித்த இந்த வெளியேற்றத்தின் பின்னர், பல குடும்பங்கள் சுமார் இருபது ஆண்டுகளாகத் தமது சொந்த மண்ணிலிருந்து பிரிந்து வாழ்ந்தன.

அகதி முகாம்களில் ஓலைக் கொட்டில்களிலும் தற்காலிகக் குடியிருப்புகளிலும், பல்வேறு பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். அக்காலத்தில் பல குடும்பங்கள் தொழில் வாய்ப்புகள் இன்றி, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உதவிகளை நம்பியே வாழ வேண்டியிருந்தது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தபோது, தமது தாயகத்திற்குத் திரும்பி மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கை அவர்களிடம் பிறந்தது.

ஆனால், அந்த நம்பிக்கை எதிர்பார்த்த அளவுக்கு நிறைவேறவில்லை.

தாயகம் திரும்பிய பின்னரும் வீடுகள், காணிகள், அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம் மற்றும் நிர்வாக அங்கீகாரம் தொடர்பான பல பிரச்சினைகள் அவர்களைத் தொடர்ந்து வாட்டின.

இன்றும் இம்மக்களின் சில பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவிக்கின்றன. இருபது ஆண்டுகள் அகதிகளாக வாழ்ந்த பின்னரும், தமது சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ்வதற்காக அவர்கள் தொடர்ந்து போராட வேண்டியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தாயகம் திரும்பியபோது காத்திருந்த சவால்கள்

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடமாகாண முஸ்லிம்கள் தமது பூர்வீகக் கிராமங்களுக்குத் திரும்பத் தொடங்கினர். பல ஆண்டுகளாக மனதில் சுமந்திருந்த தாயகம் திரும்பும் கனவு நனவாகும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் பயணித்தனர்.

ஆனால், தாம் விட்டுச் சென்ற கிராமங்கள் முன்னர் இருந்த நிலையில் இல்லை. 1990ஆம் ஆண்டு முதல் நீண்டகாலமாகப் பராமரிப்பின்றிக் கிடந்த பல வீடுகளும் காணிகளும் அடர்ந்த காடுகளாகவும் புதர் மண்டிய நிலங்களாகவும் மாறியிருந்தன. ஒரு காலத்தில் மக்கள் வாழ்ந்த வீடுகளின் அடையாளங்கள் மறைந்திருந்தன. விவசாய நிலங்கள் பயிரிட முடியாத நிலைக்குச் சென்றிருந்தன.

தமது சொந்தக் காணியில் மீண்டும் ஒரு வீட்டைக் கட்டி வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்கான வசதிகள் பல குடும்பங்களிடம் இருக்கவில்லை. காணிகளைத் துப்புரவு செய்வதற்கும், வீடுகளை மீளமைப்பதற்கும், விவசாயத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் பணம் தேவைப்பட்டது. ஆனால், நீண்டகாலமாக அகதி வாழ்க்கையை அனுபவித்த மக்களிடம் அந்தச் செலவுகளைத் தாங்குவதற்கான பொருளாதார வலிமை இருக்கவில்லை.

இதனுடன், வீடுகள், மின்சாரம், குடிநீர், பாடசாலைகள், போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளும் பல இடங்களில் போதுமான அளவில் இருக்கவில்லை.

இதனால், தமது சொந்த மண்ணுக்குத் திரும்பிய மக்கள், மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்குப் பதிலாக, அன்றாடத் தேவைகளைக்கூட நிறைவேற்றுவதற்காகப் போராட வேண்டிய நிலையை எதிர்கொண்டனர்.

அகதி முகாம்களில் கழித்த ஆண்டுகள் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய இழப்புகள் ஒருபுறமிருக்க, தாயகம் திரும்பிய பின்னரும் ஏற்பட்ட சிரமங்கள் அவர்களின் நம்பிக்கையைக் குலைத்தன. தமது சொந்த மண்ணில் வாழ்வதற்கான உரிமை இருந்தும், அங்கு வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வது அவர்களுக்கு மேலும் மனவேதனையை ஏற்படுத்தியது.

மீள்குடியேற்றத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்

வடமாகாண முஸ்லிம்கள் எதிர்கொள்வதாகக் கூறப்படும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று, அவர்கள் அகதிகளாக வாழ்ந்த பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுத்திப் பார்க்கப்படுவதாகும்.

1990ஆம் ஆண்டு தமது விருப்பத்திற்கு மாறாகப் பூர்வீக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட பல குடும்பங்கள், பின்னர் புத்தளம் உள்ளிட்ட பிரதேசங்களில் நீண்டகாலமாக வாழ்ந்தன. அங்கு அவர்களுக்குப் பிள்ளைகள் பிறந்தனர்; குடும்பங்கள் வளர்ந்தன; வாழ்க்கையின் பல ஆண்டுகள் கழிந்தன.

இவ்வாறு அகதி வாழ்க்கையின் காரணமாக வேறொரு பிரதேசத்தில் வாழ்ந்துவிட்டு மீண்டும் வடமாகாணத்திற்குத் திரும்பிய குடும்பங்களை, அங்குள்ள சில நிர்வாகத் தரப்பினர் வெளிப்பிரதேசங்களிலிருந்து வந்தவர்களாகக் கருதுவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறிப்பாக, ஒருவரின் அடையாள அட்டையில் புத்தளத்தில் உள்ள அகதி முகாம் பிறப்பிடமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால், அவர் வடமாகாணத்தைச் சேர்ந்தவராக ஏற்றுக்கொள்ளப்படுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ஒரு குடும்பத்தின் தாயும் தந்தையும் வடமாகாணத்தில் பிறந்து, அங்கேயே திருமணம் செய்து வாழ்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட கட்டாய இடம்பெயர்வின் காரணமாக அவர்கள் புத்தளத்திற்குச் சென்றிருக்கலாம். அங்கு பிறந்த அவர்களின் பிள்ளைகள், பெற்றோரின் பூர்வீக வாழ்விடத்திற்குத் திரும்பும்போது நிர்வாகச் சிக்கல்களை எதிர்கொள்வதாகக் குடும்பங்கள் தெரிவிக்கின்றன.

இங்கு எழும் அடிப்படையான கேள்வி இதுதான்: பெற்றோர்கள் தமது விருப்பத்தினால் அல்லாமல், கட்டாய இடம்பெயர்வின் காரணமாக வேறொரு பிரதேசத்தில் வாழ்ந்திருந்தால், அங்கு பிறந்த பிள்ளைகள் தமது பூர்வீகத்துடன் கொண்டுள்ள தொடர்பு ஏன் சிக்கலுக்குரியதாக மாற வேண்டும்?

ஒருவர் எங்கு பிறந்தார் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், கட்டாய இடம்பெயர்வின் காரணமாக ஏற்பட்ட பிறப்பிட மாற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, குடும்பத்தின் பூர்வீகத் தொடர்பையும் மீள்குடியேற்றக் கோரிக்கையையும் புறக்கணிக்கக் கூடாது என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையாகும்.

எனவே, இத்தகைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குடும்பங்களின் பூர்வீகக் காணி ஆவணங்கள், பெற்றோரின் பிறப்பிடச் சான்றுகள், பழைய குடியிருப்புப் பதிவுகள் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றைப் பரிசீலித்து, வெளிப்படையானதும் நியாயமானதுமான நிர்வாக நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

வாக்குரிமையின்றித் தவிக்கும் மக்களின் நிலை

மீள்குடியேற்றத்துடன் தொடர்புடைய மற்றுமொரு முக்கியமான பிரச்சினை வாக்காளர் பதிவாகும். நீண்டகால இடம்பெயர்வு, நிரந்தர வதிவிடமின்மை மற்றும் ஆவணச் சிக்கல்கள் காரணமாகச் சில குடும்பங்கள் வாக்காளர் பதிவைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, புத்தளத்தில் முறையான வாக்காளர் பதிவு இல்லாமலும், வடமாகாணத்திலுள்ள தமது பூர்வீகப் பிரதேசங்களில் பதிவு செய்வதில் தடைகளை எதிர்கொண்டும் வாழும் சிலர், எந்தப் பிரதேசத்திலும் முறையாகப் பதிவுசெய்யப்படாத நிலைக்குத் தள்ளப்படுவதாகக் கூறுகின்றனர்.

இது வெறும் ஆவணச் சிக்கல் அல்ல. ஒரு குடிமகன் தேர்தல்களில் பங்கேற்று, தனது பிரதிநிதியைத் தெரிவுசெய்து, ஜனநாயகச் செயற்பாட்டில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புடன் தொடர்புடைய பிரச்சினையாகும்.

நீண்டகாலமாக அகதிகளாக வாழ்ந்ததன் விளைவாக, தமது சொந்த நாட்டிலேயே வாக்குரிமையை நடைமுறையில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைகிறது.

எனவே, இடம்பெயர்வு காரணமாக வாக்காளர் பதிவில் சிக்கல்களை எதிர்கொள்ளும் தகுதியுடைய குடிமக்களின் பிரச்சினைகள் தனித்தனியாக ஆராயப்பட வேண்டும். உரிய ஆவணங்களைப் பரிசீலித்து, சட்டத்திற்கு அமைவாக அவர்களின் வாக்காளர் பதிவை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.

தமது மண்ணை இழந்தவர்கள், பின்னர் தமது வீடுகளை மீண்டும் அமைப்பதற்காகப் போராடியவர்கள், அதற்குப் பின்னரும் தமது ஜனநாயக உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காகப் போராட வேண்டிய நிலை ஏற்படுவது அவர்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கிறது.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சொல்லொணாத் துயரங்கள்

மீள்குடியேற்றத்தின் சவால்கள் அனைவரையும் ஒரே விதமாகப் பாதிப்பதில்லை. குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகவும் கடினமானவை.

கணவனை இழந்த பெண்கள், கணவனைப் பிரிந்து வாழ்பவர்கள் அல்லது குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் தனியாகச் சுமப்பவர்கள், தமது பிள்ளைகளின் உணவு, உடை, கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.

இவர்களில் சிலருக்கு நிரந்தர வீடுகள் இல்லை. தற்காலிகமாகக் குடியிருப்பதற்கான குடில்களை அமைத்துக்கொள்வதற்குக்கூட போதிய வசதிகள் இல்லை. அவர்களுக்குச் சொந்தமான காணிகள் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றிக் காடுகளாக மாறியுள்ளதால், அவற்றைத் துப்புரவு செய்து குடியிருப்பதற்குத் தயார்படுத்துவதும் பெரும் சுமையாக உள்ளது.

ஒரு குடும்பத்தைத் தனியாக வழிநடத்தும் பெண், தனது அன்றாட வாழ்க்கைச் செலவுகளையே சமாளிக்க முடியாமல் தவிக்கும் நிலையில், காணியைத் துப்புரவு செய்வதற்கும் வீட்டைக் கட்டுவதற்கும் தேவையான பணத்தை எவ்வாறு திரட்ட முடியும்?

இத்தகைய குடும்பங்களுக்கு உரிய உதவிகள் கிடைக்காவிட்டால், அவர்கள் மீள்குடியேறுவதற்கான வாய்ப்புகள் மேலும் குறைந்து, வறுமையின் பிடியிலிருந்து வெளியேற முடியாத நிலை உருவாகும்.

குறிப்பாக, புத்தளத்திலும் முறையான பதிவின்றி, வடமாகாணத்திலும் தேவையான பதிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு வீடு, வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் பிரச்சினைகளாக மாறுகின்றன என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு தற்காலிகக் குடியிருப்புகள், காணிகளைத் துப்புரவு செய்வதற்கான உதவிகள், சுயதொழில் வாய்ப்புகள், தொழிற்பயிற்சிகள் மற்றும் பிள்ளைகளின் கல்விக்கான ஆதரவு ஆகியவை வழங்கப்படுவது அவசியமாகும்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலையைப் புறக்கணிப்பது, ஒரு குடும்பத்தின் நிகழ்காலத்தை மட்டுமல்ல, அதன் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கும். எனவே, இவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மனிதாபிமானக் கடமையாக மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்பாகவும் கருதப்பட வேண்டும்.

அடிப்படை வசதிகளின்றித் தொடரும் வாழ்க்கைப் போராட்டம்

மீள்குடியேற்றம் என்பது மக்கள் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதுடன் முடிவடைவதில்லை. அங்கு அவர்கள் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதே அதன் உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.

ஆனால், வடமாகாணத்திற்குத் திரும்பிய முஸ்லிம் குடும்பங்கள் எதிர்கொண்டதாகக் கூறப்படும் பிரச்சினைகளைப் பார்க்கும்போது, அடிப்படை வசதிகளையும் வாழ்வாதார வாய்ப்புகளையும் உறுதிப்படுத்துவதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டிய தேவை தென்படுகிறது.

வீடு இல்லாமல் வாழும் ஒரு குடும்பத்திற்கு முதலில் தேவைப்படுவது பாதுகாப்பான குடியிருப்பாகும். பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதற்குப் போக்குவரத்து வசதி தேவை. நோய்வாய்ப்பட்டால் மருத்துவ உதவி கிடைக்க வேண்டும். குடிப்பதற்குப் பாதுகாப்பான நீரும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மின்சாரமும் கிடைக்க வேண்டும்.

அதேபோன்று, குடும்பத்தின் உணவுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளைச் சமாளிப்பதற்கும் நிலையான வருமானம் அவசியமாகும்.

ஆனால், இத்தகைய தேவைகள் போதுமான அளவில் நிறைவேற்றப்படாதபோது, மீள்குடியேறிய குடும்பங்கள் மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

எனவே, பின்வரும் துறைகளில் நடைமுறை ரீதியான நடவடிக்கைகள் அவசியமாகின்றன:

• வீட்டுவசதி: வீடற்ற குடும்பங்களுக்குத் தற்காலிக மற்றும் நிரந்தர வீடுகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

• கல்வி: பாடசாலை வசதிகள், கல்வி உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல்.

• சுகாதாரம்: மருத்துவச் சேவைகள் மற்றும் ஆரம்ப சுகாதார வசதிகளை மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்தல்.

• குடிநீர் மற்றும் மின்சாரம்: பாதுகாப்பான குடிநீர், மின்சாரம் மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலை உறுதிப்படுத்துதல்.

• போக்குவரத்து: கிராமங்களை நகரங்களுடனும் அத்தியாவசிய சேவைகளுடனும் இணைக்கும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல்.

• வாழ்வாதாரம்: விவசாய நிலங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான உதவிகள், விவசாய உபகரணங்கள், சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்குதல்.

• ஆவணங்கள் மற்றும் பதிவுகள்: பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள், காணி ஆவணங்கள் மற்றும் வாக்காளர் பதிவுகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகளை நீக்குதல்.

அரசாங்க உதவிகள் தற்காலிகமாக ஒரு குடும்பத்தின் பசியைப் போக்கலாம். ஆனால், அந்தக் குடும்பம் தொடர்ந்து பிறரின் உதவியை மட்டுமே நம்பி வாழ வேண்டிய நிலை நீடிக்காமல் இருக்க, நிலையான வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்.

மக்கள் தமது காணிகளில் விவசாயம் செய்யவும், சிறு தொழில்களை ஆரம்பிக்கவும், தமது உழைப்பின் மூலம் வாழ்க்கையை முன்னேற்றவும் தேவையான ஆதரவைப் பெற வேண்டும். அதுவே அவர்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும்.

நிர்வாகப் பொறுப்பும் சமூக நல்லிணக்கமும்

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைகள் வீடுகள், காணிகள் மற்றும் வாழ்வாதாரத்துடன் மட்டும் தொடர்புடையவை அல்ல. தமது சொந்தப் பிரதேசங்களில் அவர்கள் சம உரிமையுள்ள குடிமக்களாக நடத்தப்படுகிறார்களா என்ற கேள்வியையும் இவை எழுப்புகின்றன.

1990ஆம் ஆண்டு தமது வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள், பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தாயகம் திரும்பும்போது, அவர்களின் பூர்வீகத் தொடர்புகளும் நியாயமான கோரிக்கைகளும் மதிக்கப்பட வேண்டும்.

அவர்கள் அகதிகளாக வேறொரு பிரதேசத்தில் வாழ்ந்ததையோ, அங்கு அவர்களின் பிள்ளைகள் பிறந்ததையோ காரணமாகக் கொண்டு அவர்களை வெளிநபர்களாகக் கருதும் அணுகுமுறை இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் கவனத்துடன் ஆராயப்பட வேண்டும்.

நிர்வாகத்தின் எந்தவொரு செயற்பாட்டிலும் பாகுபாடு காணப்பட்டால், அது உரிய முறையில் விசாரிக்கப்பட்டுத் திருத்தப்பட வேண்டும். அதேவேளை, மீள்குடியேற்றம் தொடர்பான ஒவ்வொரு கோரிக்கையும் சட்டரீதியான ஆவணங்கள் மற்றும் ஒரே மாதிரியான வெளிப்படையான அளவுகோல்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும்.

வடமாகாணம் என்பது அங்கு வாழும் பல்வேறு இன, மத சமூகங்களின் வரலாறு, பண்பாடு மற்றும் வாழ்வுடன் தொடர்புடைய பிரதேசமாகும். தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சமூகங்களின் உரிமைகள் மதிக்கப்படுவதும், அவர்களுக்கிடையில் நம்பிக்கையும் ஒத்துழைப்பும் வளர்க்கப்படுவதும் அவசியம்.

ஒரு சமூகத்தின் துயரத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிரான பகையாக மாற்றுவது தீர்வைத் தராது. மாறாக, பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து, நியாயமான தீர்வுகளை உருவாக்குவதன் மூலமே நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும்.

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் மீள்குடியேற்றப் பிரச்சினைகள் உரிய முறையில் அணுகப்படும்போது, மக்களிடையே நம்பிக்கை வளர்வதுடன், எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சினைகள் மீண்டும் உருவாகாமல் தடுப்பதற்கும் வழி ஏற்படும்.

மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்துவது அரசாங்கம், மாகாண நிர்வாகம், பிரதேச செயலகங்கள் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பொறுப்பாகும்.

இதற்காக முதலில், மீள்குடியேறிய குடும்பங்களின் உண்மையான நிலைமையை அறிந்துகொள்ள வேண்டும். இன்னும் மீள்குடியேற முடியாமல் உள்ள குடும்பங்கள் எத்தனை, வீடற்ற குடும்பங்கள் எத்தனை, காணி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் யார், வாக்காளர் பதிவில் சிக்கல்களைச் சந்திப்பவர்கள் எத்தனை பேர் என்பன தொடர்பான தகவல்கள் முறையாகத் திரட்டப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில், ஒவ்வொரு பிரச்சினைக்கும் தெளிவான தீர்வுத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

காடுகளாக மாறியுள்ள பூர்வீகக் காணிகளைத் துப்புரவு செய்வதற்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும். வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பிள்ளைகளின் கல்வியையும் பாதுகாப்பதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று, வாக்காளர் பதிவு மற்றும் ஏனைய ஆவணச் சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு உரிய அரச நிறுவனங்கள் மூலம் உதவி வழங்கப்பட வேண்டும்.

தகுதியுடைய எந்தவொரு குடிமகனும் நிர்வாகத் தடைகளால் தனது சட்டரீதியான உரிமைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அவர்களின் உண்மையான தேவைகளை அறியாமல் மேலிருந்து தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் கலந்தாலோசித்து நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை உருவாக்க வேண்டும்.

மீள்குடியேற்றத்திற்கான நிதி ஒதுக்கீடுகள், வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான முன்னேற்றங்கள் வெளிப்படையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். இதன் மூலம், மக்களின் கோரிக்கைகள் வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல் நடைமுறையில் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த முடியும்.

1990ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் துயரம், ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த இடம்பெயர்வுடன் முடிவடைந்துவிடவில்லை. சுமார் இருபது ஆண்டுகள் அகதிகளாக வாழ்ந்த அனுபவம், தமது பூர்வீக வீடுகளையும் காணிகளையும் இழந்த வலி, தாயகம் திரும்பிய பின்னர் எதிர்கொண்ட அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, வாழ்வாதாரச் சவால்கள், நிர்வாகத் தடைகள் மற்றும் வாக்காளர் பதிவுப் பிரச்சினைகள் எனப் பல்வேறு சுமைகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, வீடற்ற நிலையில் வாழும் குடும்பங்களும், குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் தனியாகச் சுமக்கும் பெண்களும், முறையான பதிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் மக்களும் விசேட கவனத்திற்குரியவர்கள்.

ஒரு மக்கள் கூட்டம் தனது சொந்த மண்ணுக்குத் திரும்பிவிட்டது என்பதற்காக, அதன் மீள்குடியேற்றம் முழுமையடைந்துவிட்டதாகக் கருத முடியாது. அந்த மண்ணில் பாதுகாப்பாக வாழவும், பிள்ளைகளுக்குக் கல்வி வழங்கவும், தொழில் செய்து வருமானம் ஈட்டவும், மருத்துவ வசதிகளைப் பெறவும், தமது குடிமக்கள் உரிமைகளைப் பயன்படுத்தவும் அவர்களுக்கு வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

தாயகம் திரும்பிய மக்களுக்கு வீடுகளை மட்டும் வழங்குவது போதாது; அவர்கள் கௌரவமாக வாழ்வதற்கான சூழலையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை இன, மத அல்லது பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அணுகி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது அவசியமாகும்.

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளை வழங்குவது அரசாங்கத்தினதும் உரிய நிர்வாக அமைப்புகளினதும் பொறுப்பாகும்.

இருபது ஆண்டுகளாக அகதி வாழ்க்கையை அனுபவித்த மக்கள், தாயகம் திரும்பிய பின்னரும் தமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டிய நிலை நீடிக்கக் கூடாது. அவர்களின் பிள்ளைகள் தமது பெற்றோர் அனுபவித்த அதே துயரங்களை மீண்டும் அனுபவிக்காத வகையில், நிலையான தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும்.

இறுதியாக, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது வெறும் அபிவிருத்தித் திட்டம் அல்ல. அது இழந்த வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சி; பூர்வீகத் தொடர்புகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம்; சம உரிமையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கான கோரிக்கை.

தமது சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ்வதற்கான உரிமை, அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு, வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆதரவு மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான சமவாய்ப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்படும் போதே இந்த மக்களின் மீள்குடியேற்றம் உண்மையான அர்த்தத்தில் முழுமை பெறும்.

அதுவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கும், சமூகங்களுக்கிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கும், இலங்கையில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.