Tuesday, November 10, 2026

இன்று பல மாகாணங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை!

1 min read · 7 reads

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்று (10) அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதனால், நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகள் சாதாரணமாக அல்லது ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடற்பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.

மேலும், இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.