Saturday, November 7, 2026

“அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவது நியாயமற்றது”: கொழும்பு வெள்ளம் குறித்து முகநூல் பதிவு!

2 min read · 5 reads

நேற்று பெய்த மழையால் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை வைத்து,  கொழும்பு மாநகரத்தின் உண்மை நிலவரத்தையும் அதன் வரலாற்றையும் நினைவூட்டும் நோக்கில் ஊடகவியலாளர் நௌஷாத் மொஹிதீன் (Naushad Mohideen) அவர்கள் எழுதிய முகநூல் பதிவு கீழே பகிரப்பட்டுள்ளது.

நேற்று மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக, கொழும்பு மாநகர எல்லைக்குள் வௌளப்பெருக்கு ஏற்பட்டமைக்கு இந்த அரசாங்கத்தின் மீது பழி சுமத்தி, பல பதிவுகளை நேற்றிரவே பல FBI க்கள் (Face Book Intellectuals) பதிவேற்றி உள்ளனர். இன்று காலையில் அவற்றை காணக் கூடியதாக இருந்தது.

கொழும்பு மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியது இது முதல் தடவையல்ல. இந்த வௌளப் பெருக்குக்கு தற்போதைய மாநகர நிர்வாகமோ அல்லது மத்திய அரசோ காரணம் அல்ல என்பதே எனது தாழ்மையான கருத்து.
இது அரசுக்கு வக்காளத்து வாங்கும் பதிவல்ல. அது என்னுடைய வேலையோ அல்லது தேவையோ அல்ல. கொழும்பில் பிறந்து கொழும்பிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவன் என்ற வகையில் என்னுடைய அவதானத்தை தான் இங்கு பதிவு செய்கிறேன். நான் இப்போதேல்லாம் அதிகம் எழுதுவதும் இல்லை அதிகம் பேசுவதும் இல்லை. பெரும்பாலும் ஒரு அவதானிப்பாளனாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். சில முக்கிய விடயங்களை இன்றைய FBI க்களுக்கு நினைவூட்ட வேண்டிய தேவை ஏற்படுவதால் இதை எழுதுகின்றேன்.
உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்ற இந்த அரசாங்கம் வழமையான, மலிவான அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்ட போது அதை வன்மையாகக் கண்டித்து ஒரு பதிவை இட்டிருந்தேன். அந்த கேவலமான செயற்பாட்டின் காரணமாக, இந்த அரசுக்கு வாக்களித்த நடு நிலையானவர்கள், இந்த அரசிடம் இருந்து கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காத அத்தகைய செயற்பாடுகளின் விளைவாகத் தான் இன்று இந்த அரசாங்கம் இத்தகைய வசைபாடலுக்கு ஆளாகி உள்ளது.
கொழும்பு மாநகர நிர்வாகம் இவ்வளவு காலமும் யாரிடம் இருந்தது என்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இன்றும் கூட கொழும்பு மாநகர நிர்வாகம் முழுமையாக இந்த அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டதாக நான் நம்பவில்லை. ஊழல் பெருச்சாளிகள் உள்ள அந்த கோட்டைக்குள், இன்னமும் முழுமையாக இந்த அரசாங்கத்தால் ஊடுறுவ முடியவில்லை என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம்.