Monday, November 2, 2026

நவம்பர் 1 முதல் TIN சான்றிதழ் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களங்களில் நீண்ட வரிசைகள்! 

2 min read · 8 reads

இலங்கையில் புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் (TIN) பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்கள (IRD) அலுவலகங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, திடீரென அதிகரித்த கோரிக்கைகள் காரணமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையவழிப் பதிவு மையம் ஸ்தம்பிதமடைந்து இயங்காமல் போயுள்ளதாகவும், இதனால் பதிவுகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின்கீழ், 2026 நவம்பர் 1 ஆம் திகதி முதல் 8 முக்கிய நிதி, வர்த்தக மற்றும் நிர்வாகச் சேவைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையிலேயே விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, பின்வரும் 8 தேவைகளுக்கு செல்லுபடியாகும் TIN சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்:

* வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் புதிய கணக்குகளைத் திறத்தல்.
* கட்டிடத் திட்டங்களுக்கான (Building plans) அனுமதியைப் பெறுதல்.
* மோட்டார் வாகனங்களைப் பதிவுசெய்தல்.
* மோட்டார் வாகன வருமான உரிமங்களைப் (Revenue License) புதுப்பித்தல்.
* காணி அல்லது காணி உரிமைகளைப் பதிவுசெய்தல்.
* வர்த்தக நிறுவனங்களைப் பதிவுசெய்தல்.
* இலங்கைப் நிறுவனங்களின் பங்குகளை (Shares) கைமாற்றுதல்.
* கடன் அட்டைகளைப் (Credit Cards) பெற்றுக்கொள்வது.

குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் TIN விவரங்களைச் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இலங்கையில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் TIN பதிவு கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், TIN இலக்கத்தைப் பெறுவது ஒருவர் கட்டாயம் வருமான வரி செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்காது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆண்டுக்கு 1.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டுமே பொதுவாக தனிநபர் வருமான வரி விதிக்கப்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் www.ird.gov.lk என்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் TIN இலக்கத்திற்கு விண்ணப்பிக்க முடியும். இருப்பினும், இணையத்தளத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தடங்கல்களுக்கு விண்ணப்பதாரர்களின் அதிகரிப்பே காரணமா என்பது குறித்து திணைக்களம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.