போதைப்பொருள் ஒழிப்புக்கு இணையத்தளம் அறிமுகம்!
நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்கும் தேசியப் பொறுப்பை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் ‘நாடு முழுவதும் ஒன்றிணைவோம்’ (ரட்டம ஏகட்ட) தேசிய நடவடிக்கையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.1818.gov.lk ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
‘ஒன்றிணைந்து எழுச்சியடைந்த ஓராண்டு – போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஓராண்டு மதிப்பீடு’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற சர்வமத மாநாட்டுடன் இணைந்ததாக இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் செயற்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பைக் கட்டுப்படுத்துவதற்காக, பொதுமக்கள் தகவல்களை வழங்குவதற்கும், அது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் முறையான பொறிமுறையை உருவாக்குவதே இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியதன் பிரதான நோக்கமாகும்.
நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த இணையத்தளம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஊடாக சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை, தமது அடையாளத்தை வெளிப்படுத்தியோ அல்லது முழுமையான இரகசியத்தன்மையைப் பேணியோ (Anonymously) நேரடியாக உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்க முடியும்.
மேலும், 24 மணிநேரமும் செயற்படும் 1818 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.
அத்துடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வு மற்றும் ஆலோசனைச் சேவைகளுக்கு வழிநடத்துவதற்காக 1927 என்ற அவசர தொலைபேசி இலக்கமும் இந்த நடவடிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாடளாவிய ரீதியில் பாதுகாப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகள், கைது செய்யப்படும் சந்தேகநபர்கள், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களின் அளவு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களையும் இந்த இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தத் தகவல்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.