தனிமையான வீடுகளில் வசிக்கும் முதியவர்கள் குற்றவாளிகளின் இலகுவான இலக்குகளாக மாறக்கூடும் என்பதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிள்ளைகள் தொழில் நிமித்தம் வெளியிடங்களுக்குச் செல்வது, வெளிநாடுகளுக்குச் செல்வது அல்லது வேறு மாகாணங்களில் குடியேறுவது போன்ற காரணங்களால் முதியவர்கள் வீடுகளில் தனியாக வசிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிடும் நோக்கில் இவ்வாறான வீடுகளைக் குறிவைப்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் இத்தகைய குற்றங்கள் கொலை வரை செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, முதியவர்களைப் பராமரிப்பதற்காக வெளிநபர்கள் அல்லது பணியாளர்களை நியமிக்கும்போது, அவர்களின் பின்னணி தொடர்பில் விசாரணை செய்து பொலிஸ் அறிக்கையைப் பெற்றுக்கொள்வது முக்கியம் எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், அவசரநிலைகளின்போது தொடர்புகொள்வதற்கான 119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கம், 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட அத்தியாவசிய தொலைபேசி இலக்கங்களை வீட்டில் இலகுவாகக் காணக்கூடிய இடத்தில் காட்சிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனிமையில் வசிக்கும் முதியவர்கள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூகப் பொலிஸ் குழுவினருக்கு அறிவித்தல், அயலவர்களுடன் சுமுகமான உறவைப் பேணுதல், முதியவர்கள் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய கையடக்கத் தொலைபேசியை வழங்குதல் மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.