Wednesday, November 11, 2026

2027 ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயண ஒப்பந்தத்தில் இலங்கையும் சவூதி அரேபியாவும் கையெழுத்து!

2 min read

2027 ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணம் தொடர்பான உத்தியோகபூர்வ இருதரப்பு ஒப்பந்தத்தில் இலங்கையும் சவுதி அரேபியாவும் திங்கள்கிழமை (09) கையெழுத்திட்டுள்ளன.

சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்ற வருடாந்த ஹஜ் கண்காட்சி மற்றும் மாநாட்டின் போது இந்த முக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையின் மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முலஃப்பர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவிற்கும், சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல்ஃபத்தாஹ் பின் சுலைமான் மஷாத் (Dr. Abdulfattah Bin Sulaiman Mashat) அவர்களுக்கும் இடையே இவ்வொப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னர் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, இலங்கை ஹாஜிகளுக்கான பயண வசதிகளை மேலும் சுலபமாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என இலங்கைத் தூதுக்குழு வலியுறுத்தியது.

மேலும், பிரதி அமைச்சர் முனீர் முலஃப்பர் தலைமையிலான குழுவினர் சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் மதிப்பிற்குரிய கலாநிதி தவ்பீக் பவ்சான் அல்-ரபிஆ (Dr. Tawfiq Fawzan Alrabiah) அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து, 2027 ஹஜ் ஏற்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.

இந்த ஒப்பந்த நிகழ்விலும் பேச்சுவார்த்தைகளிலும் இலங்கை சார்பாக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர்அமீர் அஜ்வத், இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார், ஜெத்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதர் நீதிபதி M.T. மொஹமட் லஃப்பார், ஹஜ் மற்றும் உம்ரா குழு உறுப்பினர் ருஷ்டி காலித், ஜெத்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்:

இவ்வாண்டு மாநாட்டின் ஒரு புதிய முன்னெடுப்பாக, ஹஜ் செயல்பாட்டுத் தரங்களை உயர்த்தும் நோக்கில் சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பயிற்சிப் பட்டறையிலும் இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் தனியார் ஹஜ் முகவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 பேர் கொண்ட கூட்டுப் பிரதிநிதிகள் குழு இந்தத் விசேட பயிற்சிகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.