ஆண் பிள்ளைகள் பாடசாலை கல்வியிலிருந்து இடைநிற்பது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்: பிரதமர் ஹரிணி.
கோட்டே ஆனந்த சாஸ்த்ராலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, நாட்டின் எதிர்காலத் தலைமுறை மற்றும் கல்வித் துறையின் தற்போதைய நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய பிரதமர், பல்கலைக்கழகக் கல்விக்குச் செல்லும் ஆண் பிள்ளைகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
அனைவரும் கட்டாயமாகப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பட்டங்களைப் பெற வேண்டும் எனத் தான் கூறவில்லை என்றாலும், பாடசாலையின் 10, 11, 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு வரும்போது ஆண் பிள்ளைகள் பாடசாலைக் கட்டமைப்பிலிருந்து விலகிச் செல்வது ஏன் என்பது குறித்து அனைவரும் ஆழமாகச் சிந்தித்து அதை மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குக் குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. 13 வருடப் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்யாமல் இடையிலேயே நிறுத்திவிட்டு ஏதோவொரு வழியில் முன்னேற முடியும் எனப் பல்வேறு இடங்களிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், பாடசாலைக்கு வருவது வெறுமனே பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரமல்ல என அவர் கூறினார்.
தலைமைத்துவப் பண்புகள், குழு உணர்வு மற்றும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல பெறுமானங்களைப் பாடசாலை ஊடாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அந்தப் பெறுமானங்களை வழங்கக்கூடிய சூழலை அனைத்துப் பாடசாலைகளிலும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக 12 மற்றும் 13ஆம் தரங்களில் ஆண் பிள்ளைகளைப் பாடசாலைக்குள் தக்கவைத்துக் கொள்வது அதிபர்களுக்கும் பாடசாலைக் கட்டமைப்பிற்கும் மிகப்பெரிய சவாலாகவுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் வழங்கும் கவர்ச்சிகரமான இடமாகப் பாடசாலையை மாற்றியமைக்கும் பொறுப்பை வலியுறுத்தினார்.
அவ்வாறு இல்லையெனில், சமூக அறிவு, ஆற்றல் மற்றும் தலைமைத்துவம் இன்மை காரணமாக ஆண் பிள்ளைகள் சமூகத்திற்குள் திசைதெரியாமல் பல்வேறு ஆபத்துகளுக்கு முகங்கொடுப்பார்கள் என அவர் கூறினார்.
நாட்டில் கல்விச் சவால்களுக்கு மேலதிகமாக, போதைப்பொருள் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல சமூக நெருக்கடிகள் காணப்படுவதாகவும், குடும்ப அமைப்பு மற்றும் மத நிறுவனங்கள் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சுட்டிக்காட்டிய பிரதமர், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கல்வி மூலமாகவும் தலையிட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அறிவு, தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை வேகமாக மாறிவரும் உலகில் வாழும் இன்றைய பிள்ளைகள், புத்தக அறிவுக்கோ அல்லது டிஜிட்டல் சாதனங்களுக்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டு சமூகத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் வலியுறுத்தினார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.