இன்று 5 மாகாணங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான மழை!
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும்.
இன்று காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான கடற்பகுதி வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசுவதுடன், காற்றின் வேகம் மணிக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை காணப்படும்.
முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
குறித்த கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் எனவும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பகுதிகள் சாதாரண அல்லது ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.