Wednesday, November 11, 2026

மலேசியாவில் ஒரு முன்மாதிரியான விவாகரத்து: முதிர்ச்சியான குடும்ப உறவுகள் சொல்லும் பாடம்!

4 min read · 7 reads

— முகமது இஸ்மாயில்

சமகாலச் சமூகத்தில் விவாகரத்து என்றாலே நீதிமன்றப் போராட்டங்கள், பரஸ்பர வன்மங்கள், பழிவாங்கும் படலங்கள் மற்றும் குழந்தைகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் கசப்பான நிகழ்வுகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.

ஆனால், இஸ்லாம் காட்டிய நெறிமுறைகளின்படியும், முதிர்ச்சியான மனிதநேயத்துடனும் விவாகரத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை எவ்வளவு அழகாகவும், அமைதியாகவும் நகர்த்த முடியும் என்பதற்கு மலேசியச் சமூகம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது.

முன்னாள் தம்பதியினர் இருவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் புதிய துணையுடன் இணைந்தாலும், குழந்தைகளின் உளவியல் நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் எவ்வாறு ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள முடியும் என்பதை இக்கட்டுரை மிக ஆழமாகப் பேசுகிறது.

வன்மங்களைத் கடந்து மனிதநேயத்தை முன்னிறுத்தும் இந்த நல்வழிப்படுத்தல், விவாகரத்தை எதிர்நோக்கும் அல்லது எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய, சிந்திக்க வேண்டிய ஒரு சமூகப் பாடம்.

மலேசியாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் உள்ளார். அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்; அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. விவாகரத்திற்குப் பிறகு அவரது முன்னாள் மனைவியும் மறுமணம் செய்துகொண்டார், இவரும் மறுமணம் செய்துகொண்டுள்ளார்.

குழந்தைகள் தாயுடன் வசிக்கின்றனர் (தாயின் மறுமணத்திற்குப் பிறகும் தந்தை ஒப்புதலுடன்). தாயார் ஒவ்வொரு நாளும் காலையில் அவர்களைப் பள்ளியில் கொண்டு வந்து விடுகிறார்; அதேவேளை, பள்ளி முடிந்ததும் தந்தை அவர்களை அழைத்துச் சென்று தன்னுடன் மதிய உணவு உட்கொண்டுவிட்டு, பின்னர் தாயின் வீட்டிற்கே கொண்டு வந்து விடுகிறார்.

குழந்தைகள் வாரத்தில் இரண்டு நாட்கள் தந்தையுடன் அவரது வீட்டில் தங்குவார்கள்; மீதி நாட்கள் தாயுடன் இருப்பார்கள்.

அவர்கள் வெள்ளிக்கிழமை மற்றும் பண்டிகைகள், சிறப்பான நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றாகக் கூடி, வீட்டிலோ அல்லது வெளியே சந்திப்பதற்கோ என்று ஒரு நாளை ஒதுக்கியுள்ளனர்.

(இங்கு ‘அனைவரும்’ என்பது தந்தையும் அவரது புதிய மனைவியும், தாயும் அவரது புதிய கணவரும், குழந்தைகளுடன் அவர்களின் புதிய உடன்பிறப்புகளையும் குறிக்கிறது).

இது குழந்தைகள் உள்ளத்தில் பாதுகாப்பை விதைக்கும் எளிய குடும்பச் சந்திப்பாகும்; தாங்கள் குடும்பத்தை இழந்துவிடவில்லை, மாறாக குடும்பமானது மேலும் பல உறுப்பினர்களையும் இரக்கமுள்ள உள்ளங்களையும் உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது என்பதை அவர்களுக்கு உணர்த்துகிறது.

இது கற்பனைக் கதை அல்ல; மாறாக நான் என் கண்களால் கண்ட உண்மை. ஏனென்றால், நான் எனது வாழ்நாளில் நீண்ட காலம் மலேசியாவில் வாழ்ந்திருக்கிறேன். மலேசிய சமூகத்தில் இது ஒரு இயல்பான விஷயம் என்பதை நான் அறிவேன்.

இஸ்லாம் விரும்பிய விவாகரத்து இதுதான்; நற்பெயரைக் கெடுக்காத, மனிதநேயத்தை மங்கச் செய்யாத, பொறுப்பைத் தட்டிழக்கச் செய்யாத விவாகரத்து.

இஸ்லாத்தில் விவாகரத்து என்பது கருணை முடிவு அல்ல.மாறாக வேறு வகையான கருணையின் தொடக்கமாகும்… அது முதிர்ச்சியான, உயர்ந்த கருணையாகும். இது பகைமையைத் தாண்டி, குழந்தைகளின் நலனை முதலிடத்தில் வைக்கிறது.

இதைச் செய்பவர்கள் பூமியில்  இருக்கிறார்கள் என்பதைச் சில மனிதர்கள் நம்ப மாட்டார்கள்; ஆனால், விவாகரத்திற்குப் பின்னுள்ள பகைமை நமது சமூகங்களில் மட்டுமே உள்ளது என்பதுதான் உண்மை.

விவாகரத்திற்குப் பிந்தைய கட்டம் என்பது ஒருவரை வெளிப்படுத்தும் கட்டமாகும். அதில் நல்லவர் யார், தீயவர் யார்; அறிவுள்ளவர் யார், முட்டாள் யார் என்பது தெளிவாகிறது.

விவாகரத்து என்பது தம்பதியினருக்கு இடையே சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லாத போது, இறுதித் தேர்வாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வல்ல அல்லாஹ்வால் சட்டமாக்கப்பட்டது.

அது வாழ்க்கையின் முடிவல்ல, ஒரு உறவின் முடிவாக இருப்பதற்காகவே அது சட்டமாக்கப்பட்டது; குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் இடையே பிரிவினையையும் பகையையும் ஏற்படுத்துவதற்கான காரணமல்ல…

வல்ல அல்லாஹ்வின் பின்வரும் திருவசனத்தை நாம் புரிந்து கொண்டால்: {فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ} (அவ்வாறாயின், நல்ல முறையில்  வைத்துக் கொள்ள வேண்டும்; அல்லது அழகிய முறையில் அவர்களைப் பிரிந்து விட வேண்டும்) மற்றும் அவனது பின்வரும் திருவசனத்தையும் நாம் புரிந்து கொண்டால்: {ولا تنسوا الفضل بينكم} (உங்களுக்கு இடையில் உள்ள நன்மைகளை மறந்துவிடாதீர்கள்)

விவாகரத்து விவகாரங்கள் இன்னும் எளிதாக இருந்திருக்கும். உரிமைகள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டு, உறவினர்களுக்கிடையேயான குறைந்தபட்ச இயல்பான உறவாவது அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம் ஆம்பளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் இடையேயான சகோதரத்துவ உறவாவது எஞ்சியிருக்கும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மக்கள் மதத்தைப் பற்றிய சரியான புரிதலில் இருந்து விலகிவிட்டதால், “நீ விவாகரத்து செய்யப்பட்டாய் (தலாஹ்)” என்ற வார்த்தை இரு தரப்பினருக்கும் இடையே ஒரு உக்கிரமான போரின் தொடக்கமாக மாறிவிடுகிறது.

குடும்பத்தினரின் மற்றும் நண்பர்களின் தலையீட்டால் அந்தப் போர் மேலும் தீவிரமடைகிறது. ஒவ்வொருவரும் தனது விவாகரத்தை, மற்றவரின் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான அல்லது அவருக்கு மன ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக தீங்கு விளைவிப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்…

குடும்ப நல ஆலோசனை அமர்வுகளில் மனதை வாட்டும் பல விடயங்களை – அதாவது மோதல்கள், போர்கள், வேண்டுமென்றே உரிமைகளைப் பறித்தல், பரஸ்பர களங்கப்படுத்துதல், குழந்தைகளைப் பேரப் பேசும் கருவிகளாகப் பயன்படுத்துதல் போன்ற மார்க்கத்திற்கும் நற்பண்புகளுக்கும் சிறிதும் தொடர்பில்லாத விடயங்களை – நான் இன்று பார்ப்பதால்தான் இவற்றை எழுதுகிறேன்.

ஆகவே, நான் இதை நினைவூட்ட விரும்புகிறேன்: நீதிமன்றங்களில் தனது முன்னாள் மனைவியை வளைத்துப் போடுபவர், பொய் சொல்பவர், போலி சாட்சிகளை அழைத்து வருபவர், ஷரியா (மார்க்கம்) அங்கீகரித்த உரிமைகளைத் தடுப்பவர், தனது முன்னாள் மனைவியுடன் சண்டையிடுவதற்கு முன்பாக தன் இறைவனுடன் சண்டையிடுகிறார்; அவளுக்குத் தீங்கு செய்வதற்கு முன்பாக தனது குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கிறார்.

நேற்றைய தினம் தனக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த ஒரு மனிதனிடம் நியாயமற்ற முறையில் பழிவாங்குவதற்காகவோ அல்லது உலகியல் லாபங்களை அடைவதற்காகவோ தனது குழந்தைகளைப் பேரப் பேசும் கருவியாகப் பயன்படுத்தத் தயங்காத சுயநலமிக்க ஒரு பெண், அவர்களைச் சந்திப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தந்திரம் செய்து திட்டமிட்டால், குழந்தைகளுக்கு எதிரான அவளது குற்றம் மிகப் பெரியது; அல்லாஹ்விடம் அவளது பாவம் அதைவிடப் பெரிது.

இறுதியில் ஒரு கேள்வி எஞ்சுகிறது: ஒரு மனிதனை அழிக்காமலோ, ஒரு தரப்புக்கு அநீதி இழைக்காமலோ, குழந்தைகளைப் பலிகடா ஆக்காமலோ ஒரு உறவு முடிவுக்கு வர முடியாதா?