பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

Date:

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல் என்ற இளைஞர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என இன்று (23) உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

2024 அக்டோபரில் சமூக ஊடகங்களில் இஸ்ரேலை எதிர்த்த ஸ்டிக்கர் பதிவுக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் சுமார் ஒன்பது மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, சம்பத் விஜேரத்ன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றில் முன்னிலையான தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி H.M.A.B. ஹேரத், தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார்.

அத்துடன், குறித்த இளைஞரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமைக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்த அவர், பகிரங்க நீதிமன்றத்தில் 2 மில்லியன் ரூபா நஷ்டஈட்டுத் தொகையை வழங்கினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, இந்த இளைஞருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கு எந்தவொரு சட்ட ரீதியான அடிப்படையும் இல்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியதை அடுத்து, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே அவரை விடுதலை செய்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

இரு தரப்பினரும் சமரசத்திற்கு இணங்கியதையடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தது.

அத்துடன், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டைத் திரும்பப் பெறுவதற்கும் குறித்த இளைஞர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.

தவறான தகவல்களின் அடிப்படையில் ஒன்பது மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த இளைஞருக்கு நீதி கிடைத்துள்ளதாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...