பெலாரஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பு மற்றும் LGBTQ+ சமூகத்தினருக்கு ஆதரவாகப் பேசுவது அல்லது அத்தகைய கருத்துகளைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புதிய மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
தன்பாலின உறவுகள், பாலின மாற்றம் மற்றும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவது “பரப்புரை” எனக் கருதப்பட்டு தண்டிக்கப்படும்.
இச்சட்டத்தை மீறும் தனிநபர்களுக்கு 900 பெலாரஷ்யன் ரூபிள்கள் வரையிலும், நிறுவனங்களுக்கு 6,750 ரூபிள்கள் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.
சிறுவர்களிடம் இத்தகைய கருத்துகளைப் பரப்புபவர்களுக்கு அபராதத்துடன் 15 நாட்கள் வரை சிறைக்காவல் அல்லது சமூகப் பணித் தண்டனையாக வழங்கப்படலாம்.
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தலைமையிலான அரசு, மேற்கத்திய கலாச்சாரத் தாக்கத்தைக் குறைக்கவும், பாரம்பரியக் குடும்ப விழுமியங்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அண்டை நாடான ரஷ்யாவில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ‘LGBTQ+ ப்ரோபகாண்டா’ சட்டத்தைப் போன்றே இந்தச் சட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் LGBTQ+ சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவும், அவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தும் முயற்சி என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம், கருத்து சுதந்திரம் முற்றிலும் முடக்கப்படும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
அதிபர் லுகாஷென்கோ இந்த மசோதாவில் கையெழுத்திட்டவுடன் இது அதிகாரப்பூர்வமாகச் சட்டமாக மாறும்.
