இனவாத எதிர்ப்புகளை முறியடித்து சாதனை: ஆஸ்திரேலியாவில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட புதிய பள்ளிவாசல்.

Date:

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள பென்டிகோ (Bendigo) நகரில், நீண்ட கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கட்டப்பட்ட புதிய மஸ்ஜித் இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

விக்டோரியா மாநில பிரதமர் ஜசின்டா அலன் இதனைத் திறந்து வைத்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு, பென்டிகோ நகரில் வாழும் முஸ்லிம் சமூகத்தினருக்காக ஒரு மஸ்ஜித்தை அமைக்கும் நோக்கில், சமூக சேவை நிறுவனம் ஒன்றின் பெயரில் 16 ஏக்கர் நிலம் கொள்வனவு செய்யப்பட்டது.

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக மஸ்ஜித்திற்கு எதிராகத் திட்டமிட்ட பொய்ப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இனவாத அமைப்புகளால் வீதிகளில் தொடர் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இறுதியில், மஸ்ஜித் கட்டுமானத்திற்குத் தடை கோரி இனவாத அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், சட்ட ரீதியாகவே இதனை எதிர்கொள்ள நிர்வாகத்தினர் தீர்மானித்தனர்.

இப்போராட்டத்தில் நீதியின் பக்கம் நின்ற முஸ்லிம் அல்லாத பலரும் தங்களது ஆதரவை வழங்கினர்.

பல்வேறு நீதிமன்ற நிலைகளைத் தாண்டி, இந்த வழக்கு இறுதியில் உயர் நீதிமன்றத்தை எட்டியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மஸ்ஜித் கட்டுவதற்கு முழுமையான சட்ட அங்கீகாரத்தை வழங்கித் தீர்ப்பளித்தது.

சுமார் 3 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட இக்கட்டுமானப் பணியின் முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று அதன் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

“பல்வேறு தடைகளைத் தாண்டி இந்த ஆலயம் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது சமூக ஒருமைப்பாட்டிற்கான ஒரு மைல்கல்.” என விழாவில் கலந்து கொண்டவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் பெருந்திரளான முஸ்லிம்கள், பிற மதத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்: கலாநிதி அலவி ஷரீப்தீன் (ஆஸ்திரேலியா)

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...