தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) கால்பந்து தொடரில், இஸ்லாமிய வீரர்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்று ஏற்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடும் வீரருக்கு வழங்கப்படும் ‘ஆட்டநாயகன்’ (Player of the Match – POTM) விருதை ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் ரசிகர்கள் தேர்வு செய்கின்றனர்.
இந்த ஆண்டிற்கான ஆட்டநாயகன் விருதை ‘மிச்செலோப் அல்ட்ரா’ (Michelob ULTRA) என்ற பிரபல பீர் (Beer) தயாரிப்பு நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது.
பொதுவாக, இவ்விருதை வெல்லும் வீரர்கள் போட்டியின் முடிவில் பீர் நிறுவனத்தின் லோகோ (Logo) மற்றும் விளம்பரங்கள் அடங்கிய பின்னணித் திரைக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்.
இஸ்லாமிய மார்க்கத்தில் மது அருந்துவதும், அதனை விளம்பரப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதால், முஸ்லிம் வீரர்கள் பீர் நிறுவனத்தின் லோகோக்கள் அடங்கிய திரையின் முன் நிற்பதைத் தவிர்க்க ஃபிஃபா முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு இஸ்லாமிய வீரர் ஆட்டநாயகன் விருதை வெல்லும்போது, பின்னணியில் இருக்கும் ‘Michelob ULTRA’ பீர் நிறுவனத்தின் பிராண்டிங் விளம்பரங்கள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படுகின்றன.
அதற்குப் பதிலாக, ஃபிஃபா உலகக் கோப்பை சின்னத்துடன் ‘சுப்பீரியர் பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ (Superior Player of the Match) என்ற வாசகம் மட்டுமே அந்தத் திரையில் இடம்பெறுகிறது. வழங்கப்படும் கோப்பையிலும் பீர் நிறுவனத்தின் லோகோக்கள் தெரியாதவாறு மறைக்கப்படுகின்றன.
பயனடைந்த நட்சத்திர வீரர்கள்:
ஃபிஃபாவின் இந்த விவேகமான மாற்றத்தின் மூலம் இதுவரை இஸ்மாயில் கோனே (கனடா) மஹ்மூத் அபுநாடா (கத்தார்), யான் தியோமண்டே (ஐவரி கோஸ்ட்), ரமின் ரெசேயன் (ஈரான்), இமாம் ஆஷூர் (எகிப்து), அலி ஒல்வான் (ஜோர்டான்)இஸ்மாயில் சைபாரி (மொராக்கோ), ஜோஹன் மன்சாம்பி (சுவிட்சர்லாந்து) இஸ்லாமிய வீரர்கள் பயனடைந்துள்ளனர்.
கடந்த 2018 உலகக் கோப்பையின் போது, எகிப்து அணியின் கோல்கீப்பர் முகமது எல் ஷெனாவி, உருகுவே அணிக்கு எதிரான தனது சிறந்த ஆட்டத்திற்காக வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை வாங்க மறுத்தார்.
அந்த விருதை ‘புட்வைசர்’ (Budweiser) என்ற பீர் நிறுவனம் ஸ்பான்சர் செய்திருந்ததே அதற்கு காரணமாக இருந்தது.
இதேபோன்ற மாற்றங்கள் இங்கிலாந்தின் பிரீமியர் லீக் (Premier League) தொடரிலும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு ஆட்டநாயகன் விருதுடன் மது பாட்டில் வழங்கப்பட்டதால் யாயா டூரே உள்ளிட்ட பல இஸ்லாமிய வீரர்கள் அதை நிராகரித்தனர்.
அதன் பின்னரே, அங்கு மது பாட்டில்களுக்குப் பதிலாக நடுநிலையான பரிசுகளும், கொண்டாட்டங்களின் போது ஆல்கஹால் இல்லாத ஷாம்பெயின்களும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
