இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி அவர்களின் மறைவு குறித்து, ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவர் ஜமால்தீன் முஹம்மத் அஷ்ரஃப் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“இந்தியாவின் மாபெரும் இஸ்லாமிய அறிஞரான மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி அவர்கள் காலமானார் என்ற செய்தி எமக்கு ஆழ்ந்த கவலையையும் துயரத்தையும் அளிக்கிறது (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்). அன்னாரின் மறைவானது ஒட்டுமொத்த சர்வதேச முஸ்லிம் உம்மத்திற்கும், இஸ்லாமிய அறிவுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
மர்ஹூம் மௌலானா அவர்கள் அல்குர்ஆன் ஆய்வு, ஹதீஸ் கலை, தஃவா (இஸ்லாமிய அழைப்புப் பணி) மற்றும் இஸ்லாமிய சிந்தனைத் துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கிய உலகப் புகழ்பெற்ற பேரறிஞராவார். இந்தியாவின் லக்னோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘தாருல் உலூம் நத்வதுல் உலமா’ நிறுவனத்தின் சிரேஷ்ட பேராசிரியராகத் தனது வாழ்நாளைக் கல்விப் பணிக்காக அர்ப்பணித்தவர்.
அத்துடன், இந்தியாவிலும் சர்வதேச ரீதியிலும் முஸ்லிம்களின் அறிவுசார் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்த எண்ணற்ற கல்வி, தொண்டு மற்றும் தஃவா நிறுவனங்களுக்கு அவர் தலைமை தாங்கியும், ஆதரவளித்தும் வழிகாட்டினார்.
தனது ஆழமான இஸ்லாமிய நூல்கள், சொற்பொழிவுகள் மற்றும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட அயராத உழைப்பின் மூலம், மர்ஹூம் மௌலானா செய்யித் ஸல்மான் ஹுஸைனி நத்வி அவர்கள் வரவிருக்கும் தலைமுறையினருக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு அழியாத அறிவுசார் பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்.
இஸ்லாத்திற்கான அன்னாரின் அர்ப்பணிப்பு, அறிவின் மீதான பற்று மற்றும் இஸ்லாமியக் கல்வித் துறையில் அவர் காட்டிய தலைமைத்துவம் ஆகியன என்றும் நன்றியறிதலுடன் நினைவு கூரப்படும்.
ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் சார்பாக, அன்னாரின் குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் உள்ள அவரது மாணவர்களுக்கும், சக ஊழியர்களுக்கும் மற்றும் அவரை நேசித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் (ஸுப்ஹானஹு வ தஆலா) அன்னாரின் சிறு பிழைகளை மன்னித்து, அவரது நற்கருமங்களைப் பொருந்திக் கொண்டு, அவருக்கு மிக உயர்ந்த ‘ஜன்னத்துல் பிர்தௌஸ்’ எனும் சுவர்க்க வாழ்வை வழங்கியருள வேண்டும் எனவும், இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் அழகிய பொறுமையையும் மனவலிமையையும் நல்கிட வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறோம் “எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
